தமிழ் செய்திகள்

திருப்போரூரில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட சேதம் உடனடியாக சீரமைப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் காளவாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் திங்க் கியாஸ் (முன்னர் ஏஜி&பி பிரதம் என்று அழைக்கப்பட்டது) நிறுவனம் குழாய் மூலம் கியாஸ் எரிவாயு வினியோகம் செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்களை பதித்துள்ளது.

இந்நிறுவனம் குழாய்கள் பதித்துள்ள பகுதிகளில் அது குறித்து எச்சரிக்கை பலகைகளையும் வைக்கப்பட்டுள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் வடிகால் கட்டுமானப் பணிக்காக அரசு ஒப்பந்ததாரர்களால் ஜெசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டு எரிவாயு வெளியேறியது.

இது குறித்து தகவல் அறிந்த திங்க் கியாஸ் நிறுவன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதனை உடனடியாக சரி செய்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் சீரான கியாஸ் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசாங்க விதிமுறைகளின்படி, பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும், ‘நீங்கள் தோண்டுவதற்கு முன் டயல் செய்யுங்கள்’ என்ற தொடர்பு எண் மூலம் நகராட்சி அதிகாரிகள் அல்லது நகர எரிவாயு விநியோக நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு மற்றும் வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அதாவது சிஎன்ஜி ஆகியவற்றை வழங்குவதற்காக திங்க் கியாஸ் நிறுவனம் அந்தப் பகுதியில் ஒரு வலுவான குழாய் உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது.

குழாய் செல்லும் பாதையில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் அவசர தொடர்பு பலகைகள் உள்ள போதிலும், பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு திங்க் கியாஸ் நிறுவனத்துக்கு இது குறித்து தெரிவிக்கத் தவறிவிட்டார்.

இந்த சம்பவம் நிறுவனத்திற்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நடந்ததால், அவர்கள் மீது இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத சேதம் ஏற்படும் நிலையில், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பாதுகாப்புத் தேவையை கருத்தில் கொண்டு அனைத்து ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த பகுதியில் பள்ளம் தோண்டுவதற்கு முன் கட்டணமில்லா எண் 1800-5727 105-ல் தொடர்பு கொள்ளுமாறு திங்க் கியாஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *