வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவர் வாய்ப்பு கோரி உண்ணாநிலை போராட்டம்
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பயிற்சி மருத்துவர் (Internship) இடங்களில் 20 சதவீத இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும், மேலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அவர்களுக்கு பயிற்சி மருத்துவராகப் பயிற்சி பெற அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் – வெளிநாட்டுப் பிரிவு சார்பில் ஜனவரி ஆறாம் தேதியன்று சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள bகாலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் – வெளிநாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் டாக்டர் சரண் தலைமை தாங்கினார். போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, போராட்டக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள்,
- மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% கூடுதல் இடங்களை உருவாக்கி, அவற்றை வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும்
- வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பயிற்சி மருத்துவம் வழங்க 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்ட அனுமதியை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
- வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு (FMG) தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும்
- வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் கூடுதல் பயிற்சி மருத்துவர் பயிற்சி விதிப்பதை நிறுத்த வேண்டும்
- பயிற்சி பெறும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுதி வசதிகளை வழங்க வேண்டும்
- தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், பாரபட்சம், பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்
- வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவ தேசிய மற்றும் மாநில அளவில் உதவி மையங்களை அமைக்க வேண்டும்
- தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பார்வையாளர் நேரத்தை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நீட்டிக்க வேண்டும்
என வலியுறுத்தினர்.
மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் உள்ளிட்ட நிர்வாகிகள் அரவிந்த், ஜெயலட்சுமி, முகமது வாசிப், ராகுல், நித்திஷ், தஸ்விந்த், பூபதி, அக்சய் பிரசாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
இந்த உண்ணாநிலை போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் நிறைவு செய்து வைத்து, கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

