எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாபெரும் பொங்கல் விழா – 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் பொங்கல் விழா மாபெரும் விழாவாக இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நிறுவன வேந்தரும் தமிழ்ப்பேராயப் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்களின் விருப்பப்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் விழா, 12 ஜனவரி 2026 திங்கட்கிழமையன்று காட்டாங்குளத்தூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்திலிருந்து தொடங்கிய கலைப்பேரணியில் நாதஸ்வரம், பறையிசை, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுமார் 2,000 பேர் பங்கேற்ற இந்த பேரணி, பொங்கல் விழா நடைபெற்ற விளையாட்டுத் திடலை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றன. உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் திருமதி பத்மபிரியா ரவி மற்றும் திருமதி மணிமங்கை சத்தியநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள், விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்ப்பேராயத்தை பாராட்டினார். இத்தகைய விழாக்கள் மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, தமிழர் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள உதவுவதாகவும், ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கும் விழாவாகவும் அமைவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் துணைவேந்தர், இணைத் துணைவேந்தர், பதிவாளர், தமிழ்ப்பேராயத் தலைவர், வளாக நிர்வாகிகள், இயக்குநர்கள், புலத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

