எஸ்.ஆர்.எம்.–வோல்வோ குழுமம் இணைந்து மெய்நிகர் வாகன தொழில்நுட்ப சிறப்புத் திறன் மையம்
கட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) மற்றும் வோல்வோ குழுமம் இந்தியா இணைந்து, கட்டாங்குளத்தூர் வளாகத்தில் மெய்நிகர் வாகன தொழில்நுட்பங்கள் (Virtual Vehicle Technologies) தொடர்பான சிறப்புத் திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், வோல்வோ குழுமம் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது. இதில் வோல்வோ குழுமம் இந்தியாவின் CSR இயக்குநர் ஜி.வி. ராவ், மனிதவள தலைவர் ரஞ்சித், பிரபு கிருஷ்ணன் மற்றும் பத்மாவதி கலிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டாண்மையின் மூலம், கல்வி மற்றும் தொழில்துறை இடையிலான இடைவெளியை குறைத்து, வேகமாக வளர்ந்து வரும் வாகன மற்றும் மொபிலிட்டி துறைக்கு தேவையான மெய்நிகர் வாகன தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஜி.வி. ராவ் கூறுகையில், “வோல்வோ குழுமத்தின் CSR செயல்பாடுகளில் திறன் மேம்பாடு முக்கிய இடம் பெறுகிறது. இந்த மையத்தின் மூலம், வகுப்பறை அறிவை தொழில்துறை சார்ந்த நடைமுறை அனுபவமாக மாற்றி, மாணவர்களை வேலைக்கு தயார்படுத்துவதே எங்களின் நோக்கம். முதல் ஆண்டில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் இது 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களாக விரிவுபடுத்தப்படும்,” என்றார்.
வோல்வோ குழுமம் இந்தியாவின் மனிதவள தலைவர் ரஞ்சித் கூறுகையில், “இந்த CSR முயற்சியின் கீழ் தொடங்கப்படும் சிறப்புத் திறன் மையத்தில், தொழில்துறையில் பயன்படுத்தப்படும் மென்பொருள் கருவிகள், நேரடி திட்டங்கள் மற்றும் பயிற்சி (internship) வாய்ப்புகள் வழங்கப்படும். இதனால் மாணவர்கள் பட்டம் பெறும் நேரத்திலேயே தொழில்துறைக்கு தயாராக இருப்பார்கள்,” என்றார்.
எஸ்.ஆர்.எம். தொழில் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ந. வெங்கட சாஸ்திரி, இந்த ஒப்பந்தம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பேராசிரியர் பயிற்சி, மாணவர் திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச அனுபவ முயற்சிகளின் தொடர்ச்சியாக உருவானது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் எஸ். பொன்னுசாமி மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் டீன் டாக்டர் லீனஸ் ஜீசு மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

