வங்கதேச மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவர்கள் பயிற்சி
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்கி கொடுப்பதற்கும், மருத்துவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்குவதற்கும் சென்னையில் உள்ள பிரபல ரேலா மருத்துவமனையுடன் வங்கதேசத்தை சேர்ந்த ஷேக் பசிலதுன்னீசா முஜீப் நினைவு மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ஷேக் பசிலதுன்னீசா முஜீப் நினைவு மருத்துவமனை அந்நாட்டு பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமாகும்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலாளர் ககந்தீப்சிங் பேடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், ரேலா மருத்துவமனை சார்பாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மருத்துவர் முகம்மது ரேலா, வங்கதேச மருத்துவமனையின் முதன் செயல் அதிகாரி மொஹம்மது டௌபிக் பின் இஸ்மாயில் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மருத்துவர் முகம்மது ரேலா கூறுகையில்,
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள வங்கதேசம், மியான்மர், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் வாழும் மக்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக் செய்து கொள்ள வசதி படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்பதால், தங்கள் நாட்டில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொடுக்க வேண்டும் என வங்கதேச பிரதமர் எண்ணினார்.
அதன் தொடர்ச்சியாக அவர் வைத்த கோரிக்கையின்படி, அவரது நேரடி கட்டுப்பாட்டில் தொண்டு நிறுவனமாக இயங்கி வரும் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான பயிற்சியை அளிப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, கடந்த ஓராண்டாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கதேசம் சென்று அங்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பயிற்சியை துவங்க உள்ளோம்.
இந்த ஒப்பந்தப்படி முதல்கட்டமாக வங்கதேச மருத்துவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவர், இரண்டாம் கட்டமாக இந்திய மருத்துவர்கள் வங்கதேசம் சென்று பயிற்சி வழங்குவர். கடைசி கட்டமாக வங்கதேச மருத்துவர்களே தனியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வர் என்று அவர் தெரிவித்தார்.
17 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள வங்கதேசத்தில் சுமாராக மூவாயிரம் கல்லீரல் மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.