கண் அழுத்த நோயாளிகளுக்கான மாநாடு; அகர்வால் மருத்துவமனை சென்னையில் நடத்துகிறது
கிளாகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான மாநாட்டினை அகர்வால் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.
வருகின்ற மார்ச் 29 ஆம் தேதியன்று சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் அஷ்வின் அகர்வால், மருத்துவ சேவைகள் பிரிவின் மண்டலத் தலைவர் மருத்துவர் கலாதேவி சதீஷ், மருத்துவ சேவைகள் பிரிவின் பிராந்தியத் தலைவர் டாக்டர் பிரீத்தி எஸ், மற்றும் மருத்துவர்கள் அனு எம். ராஜாடின், மணீஷ் ஷா, மேதா பிரபுதேசாய், சுகேப்ரியா, சினேகா மதுர் கன்காரியா, ஆகியோர் கண் அழுத்த நோய் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான லேசர் சிகிச்சைகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டில் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்க https://www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்கிற இணையதளத்திலும், 95949 01868 என்கிற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு கட்டணமாக 99 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தங்களின் சிகிச்சைக்கான மருந்து சீட்டை பதிவேற்றினால் பதிவு கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள அகர்வால் மருத்துவ மையத்தில் பதிவு செய்து கொண்டு அந்த மையத்திலேயே காணொளி வாயிலாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப அறிகுறிகள் ஏதுமின்றி இருப்பதால் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நோய் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அம்மருத்துவமனையின் தலைவர் அஸ்வின் அகர்வால் தெரிவித்தார்.
அத்தோடு இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் இலவச கண் அழுத்த நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், பதிவு செய்த அனைவருக்கும் ஒரு வாரத்திற்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு தெலுங்கானா (செகந்திராபாத்), பெங்களூர் (யெலஹங்கா), புனே (கோத்ரூட்), மும்பை (செம்பூர்), கோயம்புத்தூர் (ஆர்எஸ் புரம்), மதுரை (ஆரப்பாளையம்), மொஹாலி, சேலம், புதுச்சேரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நடைபெறும்.