சர்வதேச சமையல் போட்டிகளில் சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் வெற்றி
சென்னை, 16 ஜூன் 2024: சர்வதேச அளவில் நடைபெற்ற சமையல் போட்டிகளில் சென்னைஸ் அமிர்தா சமையற்கலை கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றியாளர்களை கௌரவிக்கும் விதமாக சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் சார்பாக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன் ஆகியோர் மாணவர்களை கௌரவித்தனர்.
ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றில் இல்லாத வகையில் 124 ஆண்டுகளில் முதல் இந்தியா சார்பாக சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில், 22 நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்களின் கடும் போட்டியை எதிர்கொண்டு சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 3 தங்கம், 6 வெள்ளி, 1வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றனர்.
சென்னைஸ் அமிர்தாவின் தங்கமங்கை அமிர்தா ஸ்ரேயா அனீஷ் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி புட் கார்விங் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் காட்சிப்படுத்துவதில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னையின் அமிர்தா மாணவர்கள் 2024 மே 20 முதல் 22 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 27 வது எக்ஸ்போ கலினயரில் எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் சலூன் கலினயர் 2024 ஆகிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினர்.
எமிரேட்ஸ் கலினரி கில்டு நடத்திய இந்தப் போட்டியில் அமீரகம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 911 சமையல் வல்லுனர்களுடன் போட்டியிட்டு, 39 பிரிவுகளில் கலந்து கொண்டனர். ஓட்டோ வீபிள் தலைமையிலான 23 நடுவர்கள் அடங்கிய குழு இந்த போட்டிகளில் வென்றவர்களை தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இது வேர்ல்ட் செஃப் அசோசியேஷன் சொசைட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த போட்டிகளில் சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை பெற்றனர்.
ஸ்ரேயா அனீஷ் மற்றும் அமிர்தா பி சதன் ஆகியோர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கார்விங் செய்வதில் தங்களது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களைப் வென்றனர்.
2024 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மலேசியா பேட்டில் ஆஃப் தி செஃப்ஸ் 2024 போட்டியில் பங்கேற்று மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்து மகுடம் சூட்டினர். மலேசியாவின் பினாங்கில் நடைபெற்ற “கான்டினென்டல் சமையல் போட்டி” 1200-க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்கள், 65 பிரிவுகள் என பிரமாண்டமாக போட்டி நடத்தப்பட்டது. இதிலும் ஸ்ரேயா அனீஷ் பழங்கள் மற்றும் காய்கறிகளை கார்விங் செய்து வெண்கலப் பதக்கம் வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி நிகழ்ச்சியில் பேசுகையில், தொழில்துறை மற்றும் தொழில்வல்லுநர்களோடு போட்டியிட்டு, சர்வதேச அரங்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்ற மாணவர்கள் ஸ்ரேயா அனீஷ் மற்றும் அமிர்தா பி.சதன் ஆகியோரால் மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்தார். மாணவர்களின் சாதனைகள் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னைஸ் அமிர்தாவில் வழங்கப்படும் கல்வி மற்றும் பயிற்சியின் திறனையும் எடுத்துக்காட்டுவதாகவும் கூறி சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்களின் மகிழ்ச்சியின் உருவமாகத் திகழும் அதன் தலைவர் திரு.ஆர்.பூமநாதனுக்கு சிறப்புப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் பூமிநாதன் பேசுகையில், ஹோட்டல் கல்வியில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை அமைப்பதுடன், எதிர்கால சமையல் நிபுணர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா தலைமை நிர்வாக அதிகாரி கவிதா நந்தகுமார், சி.ஏ.டி. லியோ பிரசாத், டீன் மில்டன், பல்கலைக் கழகத்துறை தலைவர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.