தென்மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பின் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகரில் அமைந்துள்ள சமூகநலக்கூடத்தில் தென்மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பின் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
தென் மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பின் தலைவர் பார்த்திபன் தலைமையிலும், பொதுச்செயலாளர் நாஞ்சில் வினோ முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் செல்வகணபதி, ராஜ்பரத், தனியார் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராமசுப்பிரமணியன், திசையன்விளையை சேர்ந்த பண்டாரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில், தென் மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பினை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கார் ஓட்டுனர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
வெவ்வேறு காலகட்டங்களில் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு உரிய நேரத்தில் உதவியதற்காக தென் மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பினை சேர்ந்த உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் நடந்த விபத்தில் சிக்கிய தங்களது சக ஓட்டுநருக்கு உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் அவர் இறந்துவிட்டார். அவருக்கு நேர்ந்ததுபோல் வேறு யாருக்கும் நிகழ கூடாது என்கிற காரணத்தினால் இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டதாகவும், ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஓட்டுநர் இறக்கும் நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் செய்யவுள்ளதாகவும் தென் மாவட்ட கார் ஓட்டுநர்கள் நல அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.