நடிகர் அஜித் வாக்குச்சாவடி மாற்றப்பட்டது ஏன்
வேறு எந்த நிகழ்ச்சிக்கு வருகிறாரோ இல்லையோ, தேர்தல் என்றாலே முதல் ஆளாக வந்து தனது ஜனநாயக கடமையை செய்வார் நடிகர் அஜித்.
சென்னை திருவான்மியூர் நான்காவது சீவார்டு சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் நடிகர் அஜித்.
வழக்கமாக சென்னை திருவான்மியூர் குப்பம் சாலையில் உள்ள சென்னை துவக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை ஏழு மணிக்கு முன்னதாகவே தனது மனைவி ஷாலினி மற்றும் தனது தாயாருடன் வந்து முதல் ஆளாக வாக்கு செலுத்துவார் நடிகர் அஜித்.
நடிகர் அஜித்தை பார்ப்பதற்காகவே அவரது ரசிகர்களும், பொதுமக்களும் இந்த வாக்குச்சாவடி முன்னர் கூடுவது. கடும் நெரிசலுக்கு மத்தியில் தான் அஜித் தனது குடும்பத்தாரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்வார்.
போலீசார் எவ்வளவு முயற்சி செய்தாலும் சில தவிர்க்க முடியாத சம்பவங்களும் அஜித் ஓட்டு போடும் சயமத்தில் ஏற்படுகிறது.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டன. பல வாக்காளர்களின் வாக்கு மையங்களும் மாற்றி அமைக்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே நடிகர் அஜித் திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள அரசு பாரதிதாசன் பள்ளியில் வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழைய வாக்குச்சாவடியிலேயே வாக்களித்தார்.
இந்த முறை வாக்குச்சாவடி மாற்றியமைக்கப்பட்டு திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள அரசு பள்ளியில் நடிகர் வாக்களித்தார்.
இதற்காக காலை 6:40 மணிக்கே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்தார் அஜித். 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு துவங்கும் என்பதால் 20 நிமிடங்கள் வாக்குச்சாவடியில் காத்திருந்தார் அஜித்.
சரியாக 7 மணிக்கு முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார் அஜித். அவர் வந்திருப்பதை அறிந்து ரசிகர்கள் கூட்டம் வாக்கு மையத்தின் வெளியே கூடியது. கூட்ட நெரிசலில் இருந்து அவரை அலேக்காக கூட்டி சென்றனர் திருவான்மியூர் போலீசார்.
வழக்கமாக தந்து மனைவி ஷாலினி, தனது அம்மாவுடன் வாக்களிக்க வருகை தரும் நடிகர், இம்முறை தனியாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.