கையில் காயத்துடன் வாக்களித்த விஜய்
நடைபெற்று வரும் மக்களைவை தேர்தலுக்கான வாக்குபதிவில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் வசித்து வரும் நடிகர் விஜய், தனது வீட்டின் அருகே கபாலீஸ்வரர் நகர் பகுதியில் அமைந்துள்ள புனித தோமையர் ஊராட்சி துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு-வின் தயாரிப்பில் கோட் என்னும் படத்தில் நடித்து வரும் விஜய், துபாயில் படபிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், தனது வாக்கினை பதிவு செய்வதற்காக இன்று காலை சுமார் 10 மணியளவில் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வென்றடைந்தார்.
நடிகர் விஜய்யை காண்பதற்காக அவரது வீடு மற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும், பத்திரிக்கையாளர்களும், யூடியூபர்களும் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த முறையை போன்று இம்முறையும் சைக்கிளில் வந்து வாக்களிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் காரில் வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல் விஜய் வீடு அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு காவல் துறையினர் தடுப்பு அமைத்து போக்குவரத்து தடைசெய்தனர்.
வீட்டிலிருந்து தனது இன்னோவா காரில் வாக்குச்சாவடிக்கு சென்றார் நடிகர் விஜய்.
இருப்பினும் வாக்கு சாவடிக்கு அருகே குவிந்திருந்த அவரது ரசிகர்கள் அவரது காரினை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் வெள்ளத்தில் அவரை போலீசார் பத்திரமாக வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஊழியர்கள் அவரது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து கையில் மை வைத்தனர்.
நடிகர் விஜய்-ன் இடது கையில் காயம் ஏற்பட்டு அதற்கு பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்று வரும் கோட் திரைப்படத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்களிக்கும் இயந்திரத்தில் தமிழக வெற்றி கட்சியின் தலைவராக தனது முதல் வாக்கினை பதிவு செய்தார் விஜய்.