ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு விநியோக குழாயில் சேதம்; போலீசில் புகார்
காஞ்சிபுரம்: ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி எனப்படும் எரிவாயுவிற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் சென்னைக்கு அருகே பெரும்பாக்கம் ஜெயாநகரில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அங்கு ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த ஏஜி&பி பிரதம் நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டு, எரிவாயு கசிவு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிறுவன ஊழியர்கள் சேதத்தை சரிசெய்து எரிவாயு விநியோகத்தை சீர்செய்தனர்.
மேலும், இது தொடர்பாக ஏஜி&பி பிரதம் நிறுவனம் சார்பாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தினர்.
இதுகுறித்து ஏஜி&பி பிரதம் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று, மாநில அரசின் ஒத்துழைப்போடு எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும். முறையான அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் எரிவாயு குழாய்களில் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.
அரசு சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பினர் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சியையோ அல்லது நகர எரிவாயு வினியோக நிறுவனத்திற்கு ‘தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்னும் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் கட்டணமில்லா எண். +91 8056847333/1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.