குறுகிய கால மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆல்பா கேர் மருத்துவமனை சென்னையில் துவக்கம்
மருத்துவத்துறையில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய நோக்கத்திற்காக பிரத்யேக மருத்துவமனை ஒன்று சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.
பிரபல மருத்துவர்கள் பாபு நாராயணன் மற்றும் ஏடேல் ஆகியோர் இணைந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆல்பாகேர் மருத்துவமனை என்ற பெயரில் பன்னோக்கு மருத்துவமனையை துவக்கியுள்ளனர்.
குறுகிய கால அளவிற்கு மருத்துவமனை கண்காணிப்பு தேவைப்படும் நோய்களுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தமிழக கூடுதல் தலைமை செயலர் ஜவஹர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
குறுகிய கால மருத்துவ சிகிச்சைகளோடு, அவசர கால சிகிச்சைகளும் இம்மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. விரைவில் அரசின் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் தரமான சிகிச்சைகள் இம்மருத்துவமனையின் மூலம் சென்றடைய வேண்டும் என பேசினார்.
மருத்துவர் ஏடேல் பேசுகையில்,
குறுகிய கால மருத்துவ சிகிச்சை என்பது தமிழகத்திற்கு புதுமையான திட்டம். குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு குறுகிய காலத்திற்கு மட்டும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டால் போதுமானது.
இம்மாதிரியான மருத்துவமனைகள் வெளிநாடுகளில் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் நோயாளிகள் குறுகிய காலத்திற்கு மட்டும் மருத்துவமனையில் தங்குவதால் மருத்துவ கட்டணம் வெகுவாக குறைவதோடு, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்றும் தடுக்கப்படுகிறது.
இதேபோன்று பல மருத்துவமனைகள் சென்னையின் பல பகுதிகளில் துவக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவர் பாபு நாராயணன் பேசுகையில்,
நோயாளிகளுக்கு ஏற்படும் சாதாரண நோய்களுக்கு பெரிய மருத்துவமனைகளை நாடமுடியாத சூழலில் இம்மாதிரியான மருத்துவமனைகள் உதவியாக இருக்கும்.
தற்போது எங்களது மருத்துவமனையில் 40 படுக்கைகள் உள்ளது. ஆனால் 200-300 படுக்கைகள் உள்ள பெரிய மருத்துவமனைகளில் வழங்கப்படும் தரமான சிகிச்சையை குறைவான கட்டணத்தில் வழங்குகிறோம் என கூறினார்.