பெசன்ட்நகர் மாதா கோவில் திருவிழா ஆகஸ்ட் 29 தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது
சென்னை: சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் 53-ஆம் ஆண்டுத்திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு 29 ஆம் தேதி மாலையில் மாதாபடம் பொறிக்கப்பட்ட 12 அடி அகலமுள்ள கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி 75 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்கிறார்.
திருவிழாவையடுத்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நாள் முழுவதும் சிறப்பு ஆராதனைகளும், திருப்பலிகளும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் பெசன்ட் நகருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சென்னை மாவட்ட காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் பக்தர்களுக்கு போதிய அளவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் அருட்தந்தை அருளப்பா தெரிவித்தார்.