மழை வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்றிதழ் வழங்குகிறது உயர்கல்விதுறை
தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்று தருகிறது உயர்கல்வித்துறை.
சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை விளக்கியுள்ளது.
ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்காக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் https://www.mycertificates.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
தற்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சான்றிதழ்களை இழந்த மாணவர்களும் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களது செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி, தங்களின் மாவட்டம் ஆகியவற்றை சரியாக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கிறார்களோ அந்தந்த மாவட்டத்திலேயே சான்றிதழ்களை பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.