நடமாடும் மேமோகிராம் ஆய்வக வசதியுடன் மருத்துவ முகாம்; அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப் நடத்தியது
சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்திடும் நோக்கத்தில் சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப் சார்பில் மருத்துவ முகாம் ஜூன் 25-ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில், பொது மருத்துவ பரிசோதனைகள், மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, பல், கண், நீரிழிவு, தைராய்டு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ரோட்டரி கிளப் சென்னை இ.சி.ஆர்-ஐ சேர்ந்த மருத்துவர் பிரமீளா ஆகியோர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப் உடன் இணைந்து இந்த மருத்துவ முகாமினை நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்சரா ரெட்டி:
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தங்களது உடல் நலனை பாதுகாத்திடும் பொருட்டு இந்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்பட்டிருப்பதாக அப்சரா தெரிவித்தார்.
புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் பரிசோதனைகள் மையங்கள் இல்லாத காரணத்தினால், தரமான உயர்ரக நடமாடும் மேமோகிராம் ஆய்வக வசதியை கொண்டு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதாகவும், புற்றுநோய் மட்டுமில்லாமல் இந்த மருத்துவமுகாமில் பரிசோதனை செய்துகொள்ளும் நபர் ஒருவருக்கு எந்தவிதமான பாதிப்பும் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு இலவசமாக மேல்சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.