அறுபடை வீடு இலவச ஆன்மிக சுற்றுலா; யார் யாரெல்லாம் செல்ல முடியும், விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக உள்ள திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு பக்தர்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆண்டிற்கு 1000 பேர் இலவசமாக அழைத்து செல்லப்படுவர். ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த ஆன்மிக சுற்றுலாவில் முதல் கட்டமாக வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி 200 பக்தர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்கிற இணையதளத்தில் விண்ணப்படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலலாம் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அலுவலகத்திலும் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 22 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த ஆன்மிக சுற்றுலாவிற்கு செல்வதற்கு கீழ்கண்ட நிபந்தனைகளை இந்துசமய அறநிலையத்துறை விதித்துள்ளது.
- இந்து மதத்தை சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கு ஆதாரமாக பள்ளி/கல்லூரி சான்று அல்லது இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதற்கான வட்டாட்சியர் அளித்த சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவர் 60 முதல் 70 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும், அதற்கான சான்றாக பள்ளி படிப்பு சான்று அல்லது கல்லூரி படிப்பு சான்று அல்லது பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட். இதில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- வீட்டின் முகவரிக்கான சான்றாக ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் இதில் ஏதேனும் ஒன்றை தர வேண்டும்.
- சுற்றுலா செல்வதற்கு ஏதுவான உடல்நிலை பெற்றுள்ளதற்கான ஆதாரமாக அரசு மருத்துவரின் சான்றிதழ் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
- சுற்றுலா செல்லும் விரும்பும் நபர் 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவராக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றாக வட்டாட்சியர் அளித்த வருமான சான்று அல்லது வருமானவரி செலுத்திய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 3.
- ஆதார் அட்டை நகர் சமர்ப்பிக்க வேண்டும்.
சுற்றுலா செல்லும் விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும்போது மேற்கண்ட சான்றுகளை அவசியம் இணைக்க வேண்டும்.
மேலும், சுற்றுலா செல்பவர்கள் நான்கு நாட்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை தங்களுடன் எடுத்து வரவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.