தமிழ் செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கான தொழில்நோக்கு விழா

சென்னை: அவ்தார் மனித மூலதன அறக்கட்டளை ஆண்டுதோறும் உத்யோக் உத்சவ் என்ற தொழில் தொலைநோக்கு நிகழ்வை நடத்துகிறது. ப்ராஜெக்ட் புத்திரி முயற்சியின் கீழ் நடத்தப்படும் இந்த நிகழ்வு, அரசு பள்ளி மாணவிகளுக்கு தொழில் நோக்கத்தை வளர்த்துக் கொடுத்து, பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் சமூக நம்பிக்கையுடனும் இருக்க அவர்களுக்கு வழிவகுக்கிறது.

இதன் சென்னை பதிப்பு அவதார் மனித மூலதன அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவருமான டாக்டர் சவுந்தர்யா ராஜேஷின் தொடக்க உரையுடன் தொடங்கியது.

பின்தங்கிய வாழ்வாதாரத்தை சேர்ந்த மாணவிகளின் நிலையான வேலை நோக்கத்திற்காக முதன்முதலில் புராஜெக்ட் புத்ரி என்னும் முன்முயற்சியை அவதார் அறக்கட்டளை துவங்கியது. துவங்கப்பட்ட நாள் முதல் புத்ரி திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் 22,000க்கும் மேற்பட்ட பின்தங்கிய பள்ளி மாணவிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. 130க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்திட்டம் தலைமைத்துவம், முடிவெடுத்தல், விமர்சன சிந்தனை மற்றும் மீள்தன்மை உள்ளிட்ட 40 வகையான வாழ்க்கைத்திறன்களில் மாணவிகளுக்கு வாராந்திர பயிற்சி அளிக்கிறது. கூடுதலாக, 10 மற்றும்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மனோவியல் மதிப்பீடுகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் உறுதிமொழி, பங்கேற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரங்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள், கலைநிகழ்ச்சிகள் புத்ரி மற்றும் நிபுணி மாணவிகளின் உணர்வுபூர்வமான சாட்சியங்கள் மேலும் 4 சிறந்த மாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்களின் அறிவுப்பகிர்வு அமர்வுகள் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. 20க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் பங்கேற்றதன் மூலம், புத்ரி மாணவிகளுக்கான விலைமதிப்பற்ற அறிவுப் பகிர்வுதளத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புத்ரி திட்டம் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண்களிடையே தொழில் நோக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் முயற்சியாகும்.

நிகழ்வின் போது டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “ஒவ்வொரு பெண் குழந்தையும் அர்த்தமுள்ள ஒரு தொழிலை விரும்ப வேண்டும், தனது வாழ்க்கையையும் பாதுகாப்பையும் பொறுப்பேற்கவேண்டும், பொருளாதார சுதந்திரத்தை அடைய வேண்டும். ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் பணியிடத்தில் நுழைவதில் உள்ள சவால்களை நான் எதிர்கொண்ட போது, எண்ணற்ற பெண்கள் அதே போராட்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இது ஒரு சமூக நிறுவனத்தை உருவாக்க என்னைத் தூண்டியது, இது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இரண்டாம் நிலைப்பெண்கள் வேலைக்குத் திரும்புவதற்கு உதவியது. பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருக்கும் போது, அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கணிசமாக உயர்த்துகிறார்கள்.” என்று கூறினார்.

முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ரேஸ் நிறுவனர் மற்றும் வெராண்டா போட்டித்தேர்வுகளின் தலைவர் திரு. பாரத் சீமான், கூட்டத்தில் உரையாற்றி, புத்திரி அறிஞர்கள் தங்கள் இலக்குகளை தைரியமும் உறுதியும் கொண்டு தொடரவேண்டும் என்று ஊக்கமளித்தார். “பெரிதினும் பெரியது கேள்” என்ற தமிழ் பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், சிறிய வாய்ப்புகளில் திருப்தி அடையாமல், உயர்ந்த இலக்குகளை நோக்கி பாடுபட்டு சிறப்பான வாழ்க்கையை உருவாக்குமாறு மாணவிகளைக் கேட்டுக் கொண்டார்
மேலும் பாட்ரிஷியன் கல்லூரி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் துணைமுதல்வர் டாக்டர்பி. மீனா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், எல்.பி.ஜி., TNSO பிரிவு தலைமை பொது மேலாளர் திரு. என். மனோகரன், யு.பி.எஸ். இந்தியா டெக்னாலஜி சென்டர் மூத்த இயக்குநர் திருமதி எஸ். வைஜயந்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *