General

ஒரு கோடியே 27 லட்சம் வரி பாக்கி; BSNL அலுவலகத்திற்கு ஜப்தி நோட்டீஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி செலவு ஏற்படுவதால் நிலுவையில் உள்ள வரி வசூலினை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகரில் இயங்கி வரும் நிறுவனங்கள் குடியிருப்புகள் கடைகள் ஆகியவற்றிற்கு நிலுவையில் உள்ள பாக்கி தொகை குறித்து முதல் அறிக்கை அளிக்கப்பட்டு அதன் பின் தற்போது இறுதி அவகாச அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில், காமராஜர் தெரு மற்றும் வணிகர் தெருவில் என இரண்டு இடங்களில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் கடந்த 2014 முதல் தற்போது வரை சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை வரிகள் செலுத்தாதது குறித்து பல்வேறு கால நிலைகளில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்படும் இதனை அலட்சியப்படுத்தியே இந்நிறுவனம் வந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பி. சுஜாதா , ஆர் ஐ செல்வராஜ் , வருவாய் உதவியாளர்கள் ஞானகுமார் கார்த்திகேயன் ரகுபதி மற்றும் இளநிலை உதவியாளர் பரத் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு வணிகர் வீதியில் உள்ள துணை மேலாளர் அலுவலகத்தில் ஜப்தி குறித்த நோட்டீஸ் வழங்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

BSNL அலுவலக நுழைவு வாயிலில் இரு பக்கமும் ஜப்தி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த ஜப்தி நோட்டீஸில், வணிகர் வீதியில் இயங்கும் அலுவலகத்திற்கு சொத்து வழியாக ஒரு கோடியே மூணு லட்சத்து 770 ரூபாயும், காமராஜர் வீதி அலுவலகத்திற்கு 24 லட்சத்து 83 ஆயிரத்து 546 ரூபாய் வரி பாக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டு, வரும் ஒன்பதாம் தேதிக்குள் இதனை செலுத்த வேண்டும் என இறுதி கட்ட எச்சரிக்கைக்கான ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனை மீறும் பட்சத்தில் அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அதிகாரம் உள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொலைத்தொடர்பு அலுவலக ஊழியர்கள் கடந்த 12 ஆண்டு காலமாக பாதாள சாக்கடை மற்றும் குழாய் இணைப்பு இல்லாத நிலையில் அதற்கு வரி வசூல் செய்யும் மாநகராட்சியின் செயல் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதனை தள்ளுபடி செய்யக்கோரி முறைப்படி தெரிவித்தும் இதனையும் சேர்த்து அவர்கள் நோட்டீஸ் அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *