பதினோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பதினோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய ஆயுத காவல்படை வீரர்களுக்கு எக்ஸ்-சர்வீஸ் மேன் என்னும் அந்தஸ்த்தினை வழங்குதல், வீடு-தண்ணீர் உள்ளிட்ட வரிகளில் விலக்கு, வேலைவாய்ப்பு, கல்வி மருத்துவம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு, கொடிநாள் நிதி வழங்குதல், நலவாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் முதன்மை செயலாளர் மனோகரன் கூறுகையில், 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் மத்திய ஆயுத காவல்படையினருக்கும் வழங்க வேண்டும் என்கிற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அத்தோடு, ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசின் சார்பில் மத்திய ஆயுத காவல்படையினருக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டுமெனவும், ஓய்வுபெற்ற மத்திய ஆயுத காவல்படையினரின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக அவர் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில், அடுத்த ஆண்டு அதிகளவிலான முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினர் ஒருங்கிணைக்கப்பட்டு போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் துணை தலைவர் தமிழரசன், செயலாளர் செல்லசாமி, பொருளாளர் பூர்ணச்சந்திரன், துணை பொருளாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.