விவசாய ட்ரோன்களுக்கு மத்திய அரசு 40 சதவீத மானியம்
விவசாயத்திற்கு பயன்படுத்தும் ட்ரான்களுக்கு மத்திய அரசு 40 சதவீத மானியம் வழங்குவதாக ட்ரோன் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அந்நிறுவனத்தின் முதன் செயல் அதிகாரி ஷியாம்குமார் மற்றும் துணை தலைவர் ராகவேந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்தியாவில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன் உற்பத்தி, விற்பனை மற்றும் ட்ரோன் இயக்குவதற்கான பைலட் பயிற்சி ஆகியவற்றில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இங்கு விற்பனை செய்யப்படும் ட்ரோன்களுக்கு மத்திய அரசின் மூலம் நாற்பது சதவீத மானியம் பெறமுடியும்.
இந்தியாவில் முதன்முறையாக மத்திய அரசின் மானியத்துடன் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மட்டும் ட்ரோன் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தங்களுக்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறோம்.
விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்களின் விலை ஐந்து லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இதில், நாற்பது சதவீத மானியம் போக மீதம் உள்ள தொகைக்கு வங்கி மூலம் கடனுதவியும் தங்களது நிறுவனம் ஏற்பாடு செய்வதாக கூறினர்.
மேலும், மனித உழைப்பின் மூலம் ஒரு ஏக்கருக்கு பூச்சி கொல்லி மருந்து தெளிக்க நான்கு மணிநேரம் ஆகும் நிலையில், தங்களது ட்ரோன்களை பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு வெறும் 8 நிமிடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.