POLITICAL

தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் 100 சதவீதம் அண்ணாமலை தான்: காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

பாஜகவில் இருந்து விலகியதையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர், இடைநீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 2 மாதமாக விசாரணை நடத்த கேட்டுக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து டார்கெட் செய்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். துபாயில் நான் என்ன செய்தேன் என 150 நிர்வாகிகள் முன்னிலையில் என்னை கொச்சையாக அண்ணாமலை பேசினார்.

என்னிடம் எந்த வீடியோவும் ஆடியோவும் இல்லை. அவர்களிடம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒருவரின் படுக்கை அறையில் கேமராவை வைப்பது எவ்வளவு கேவலமான ஒரு விஷயம். இதை காவல்துறையிடம் ஒப்படைத்து அதை அழிக்க வேண்டியது தானே.

துபாயில் 150 பேர் முன்னிலையில் என்னை அண்ணாமலை Character assassinate செய்தார். திமுக பிரமுகர்களோடு ஒப்பிட்டு பேசினார். ஆனால் நான் போனது இரண்டு பாஜக நிர்வாகிகளோடு. அவர்கள் எனக்கு அண்ணன் தம்பி போன்றவர்கள்.

நானும் அண்ணாமலையும் மட்டும் நேரடியாக உட்கார்ந்து பேச வேண்டிய விஷயத்தை 150 பேர் முன்னிலையில் அவர் பேசினார்.

கடந்த இரண்டு வருடமாக தான் இந்த ஆடியோ வீடியோ சர்ச்சை உள்ளது. நிறைய பெண்கள் இதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த பிறகு எப்படி அசிங்கப்படுத்தலாம் என காரணம் கண்டுபிடிக்கிறார்கள்.

அண்ணாமலை தன் மனைவியின் ஒரு போட்டோவாவது வெளியே காட்டி உள்ளாரா. அவர் மனைவி வெளியே வந்து பொது சேவை செய்துள்ளாரா?. ஆனால் நான் ஒரு தனி பெண்ணாக வந்து அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு அண்ணனாக நீங்கள் ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டும்.

என்னைக் கட்சியில் அனாதையாக விட்டு விட்டார்கள்.

அண்ணாமலையை என்னிடம் நேரடியாக வந்து பேச சொல்லுங்கள்,இன்று வரை அவர் என்னிடம் நேரடியாக பேசவில்லை. நாக்கை அறுத்து விடுவேன் என்றெல்லாம் என்னை மிரட்டினார்.

தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் நூறு சதவீதம் அண்ணாமலை தான். ஒரு நல்ல தலைவராக இருந்தால் என்னிடம் நேரடியாக அழைத்து பேசியிருப்பார்.

மற்ற கட்சியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன். யாராக இருந்தாலும் எனக்கு ஆதரவாக கை கொடுத்து சுதந்திரம், பாதுகாப்பு கொடுத்தால் அங்கே பணியை தொடர்வேன்.

அரசியல் பயணத்தை தொடர்வீர்களா என்ற கேள்விக்கு வேண்டுமென்றால் தனி நபராகவும் செயல்படுவேன் என்.ஜி.ஓ எடுத்துக் கூட செயல்படுவேன் என தெரிவித்தார்

எட்டு வருடமாக நான் கட்சியில் உழைத்ததற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. நான் கட்சிக்காக எவ்வளவோ செய்திருக்கிறேன் ஆனால் எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள்.

குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் தமிழக பாஜக வளர்ச்சிக்கு அண்ணாமலை காரணம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு கட்சி மோடியால் வளர்ச்சி அடைகிறது. அண்ணாமலையின் optics சூப்பராக உள்ளது அதை நான் மறுக்கவில்லை. தொண்டர்கள், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள் அதனால் தான் பாஜக வளர்ச்சி அடைகிறது என அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *