மாப் ஸ்டிக்கில் தொங்கும் குளுக்கோஸ் பாட்டில்; காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் அவலநிலை
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர பிரிவு வார்டில் குளுக்கோஸ் பாட்டில் தொங்க விடுவதற்காக ஸ்டாண்டு இல்லாத நிலையில் நோயாளியின் உறவினர் ஒருவர் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்து கொண்டிருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.
அதேபோல் அதே மருத்துவமனையில் காலில் காயம் பட்டவர் தண்ணீர் பிடிக்கும் வாலியை கவிழ்த்து போட்டு அதன் மீது கால் வைத்திருக்கும் வீடியோவும் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் ஏராளமான குளுக்கோஸ் ஸ்டாண்டுகள் இருப்பதாகவும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக விஷமிகள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
இது போன்ற வீடியோக்களில் துளியளவும் உண்மை இல்லை என்றும் கூறியிருந்தார்.
அதேபோல் தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் மாப் ஸ்டிக்கில் தொங்க விட்டவாறு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மருத்துவமனையின், காய்ச்சல் சிகிச்சை பிரிவில் உள்ள கட்டில்களின் நான்கு முனைகளிலும் மாப் ஸ்டிக்குகள் கட்டப்பட்டு அதன் மீது கொசு வலை கட்டப்பட்டுள்ளது. மேலும், ஒரு குச்சியின் முனையில் குளுக்கோஸ் பாட்டிலும் தொங்கவிடப்பட்டுள்ளது போன்றன காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் முகாமில் போதிய உபகரணங்கள் இன்றி மருத்துவம் அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.