முன்னாள் ஜனாதிபதிக்கு வழிகாட்டியாக இருந்தவர் வீட்டிற்கு செல்லும் வழியில் பன்றி குறுக்கே வந்ததால் மரணம்
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்று உற்சாகத்தில் இருந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிக்கு 8 மணி நேரம் மட்டுமே நீடித்த சந்தோஷம் அவருக்கு பன்றி ரூபத்தில் நேற்று சோகத்தில் முடிந்தது!
மாமல்லபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்லும்போது பன்றி குறுக்கே வந்ததால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு செவ்வாயன்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுலா வந்திருந்தார்.
அப்போது அவருக்கு அதேபகுதியை சேர்ந்த இந்தி மொழி சரளமாக பேசும் பாலகிருஷ்ணன்(வயது45) என்பவர் வழிகாட்டியாக இருந்தார்.
அவர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை முன்னாள் ஜனாதிபதிக்கு இந்தி மொழியில் சரளமாக பேசி அவருக்கு மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறி, ஜனாதிபதியே ரசிக்கும் வகையில் வியப்பில் ஆழ்த்தினார்.
அவர் உச்சரிக்கும் விதத்தை பார்த்து மாமல்லபுரம் முழுவதும் சுற்றி பார்த்த பிறகு இங்கிருந்து விடைபெற்று கிளம்பும்போது சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணனை அழைத்து ராம்நாத் கோவிந்த் பாராட்டி விட்டு சென்றார்.
இந்த சந்தோசம் பாலாகிருஷ்ணனுக்கு 8 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
பணி முடிந்து இரவு 7 மணியளவில் மாமல்லபுரத்தில் இருந்து வெண்புருஷத்தில் உள்ள தனது வீடடிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஐந்துரதம் அருகே செல்லும்போது பன்றி ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சிமெண்ட் சாலையில் விழுந்த பாலாகிருஷ்ணன் தலையில் பலத்த அடிபட்டு, காதில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிறகு தகவல் அறிந்து அங்கு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அவரது சடலததை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சுற்றுலா வழிகாட்டியாக திகழ்ந்த தினத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் மாமல்லபுரம் சக சுற்றுலா வழிகாட்டிகளிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.