50 நிமிடங்கள், 50 பாடல்கள், 10 மொழிகள்: நடனத்தில் சென்னை டான்ஸ் மாஸ்டர் புதிய உலக சாதனை
சென்னை: 50 நிமிடங்களில், 10 மொழிகளில் இசைக்கப்பட்ட 50 பாடல்களுக்கு 500-க்கும் மேற்பட்டோர் நடனமாடிய நிகழ்வு உலக சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நடனத்தின் மூலம் உடல்நலனை பேணுவதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக “டான்ஸ் ஃபிட்னஸ்: 50 நிமிடங்கள், 50 பாடல்கள், 10 மொழிகள்” என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் இந்தியாவிலும், மலேசியாவிலும் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னையில் நடன ஆசிரியர் நவீன் மோரீஸின் நெக்ஸ்ட் மூவ் எனும் நடனப்பள்ளியும், மலேசியாவில் டாக்டர் ராகவி பவனேஸ்வரியின் சங்கீத நாட்டிய குருக்குளம் நடனப்பள்ளியும் சேர்ந்தது நிகழ்சியை நடத்தியது.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 50 நிமிடங்களுக்கு, 50 பாடல்களுக்கு நடனமாடினார்.
அதேபோல், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் காணொளி மூலம் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் கலந்துகொண்டு நடனமாடினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் தினேஷ் கோபால்சாமி மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் கே.ஜே.ஐயனார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினர்.
மலேசிய நாட்டில் பாலகிருஷ்ணன், மாஸ்டர் சிவமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை மலேசிய நாட்டின் ராக்ஸ்டார் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்டஸ் நிறுவனம் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்தது.
உலக சாதனைக்கான அங்கீகார சான்றிதழை சிறப்பு விருந்தினர்கள் நடன இயக்குனர் நவீன் மோரீஸிடம் வழங்கினார். நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பங்கு வசதி அற்ற குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்பட உள்ளது.