இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம்; சென்னையில் நடைபெற்றது
சென்னை: சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயலாக்க இயக்குனர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி ராஜீவ்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை பொது மேலாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெசன்ட் நகர் தலப்பாக்கட்டி பிரியாணி அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைபயணம், வேளாங்கண்ணி மாதா கோவில் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில், ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர்.
அப்போது பேசிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயலாக்க இயக்குனர் தன்ராஜ், ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்துவதற்காக இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
சென்னையில் மட்டுமல்லாமல், நாடெங்கிலும் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கங்களும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மேலும் இது தொடர்பான விளம்பரங்களும் வங்கியின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டிற்கான, ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தின் கருப்பொருளாக “நேர்மையான கலாச்சாரமே, நாட்டின் செழுமை” என்று உள்ளது. எனவே, தங்களது வாடிக்கையாளர்கள் “லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் கொடுக்க மாட்டோம்” என்று உறுதியேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.