கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை – சென்னையில் பேரின்பப் பெருவிழா
சென்னை: சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கிறிஸ்தவ ஒருங்கிணைப்பில் புது வருட பிரார்த்தனை மற்றும் பேரின்பப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை “இயேசு அழைக்கிறார்” நிறுவனத் தலைவர் பால் தினகரன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
புது வருட ஆசீர்வாதத்திற்காக நடைபெற்ற இந்தப் பெருங்கூட்டத்தில், அனைத்து கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தலைவர்கள், சமூக சேவகர்கள், ஊடகத்துறை தலைவர்கள், வழக்கறிஞர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில், 40 அடி நீள புது வருட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
“புது வருட பேரின்பப் பெருவிழா” என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த 100 பேர் கொண்ட பாடகர் குழு பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தது. இதற்கு முன்னதாக, 3ஆம் தேதி சாமுவேல் பால் தினகரன் தலைமையில் வாலிபர்களுக்கான சிறப்பு கூடுகை நடைபெற்றது.
புது வருடத்தில் மக்களின் கண்ணீர் துடைக்கப்படவும், தேசம் மற்றும் மாநிலங்களின் நிர்வாகம் இறைவனால் வழிநடத்தப்படவும், அனைத்து இந்தியர்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழவும், இறையாசி பெருகி செழிப்பு உண்டாகவும், குடும்பங்கள், பொருளாதாரம், வணிகம் மற்றும் சமூக சேவைகள் வளர்ச்சியடையவும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பிரார்த்தனையை பால் தினகரன், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன், ஷில்பா தினகரன், ஷேரன் தினகரன், ஸ்டெல்லா ரமோலா மற்றும் டேனியேல் டேவிட்சன் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் “இயேசு விடுவிக்கிறார்” நிறுவனத் தலைவர் மோகன் சி. லாசரஸ் தேசம் மற்றும் மாநிலத்திற்காக விசேஷித்த பிரார்த்தனை நடத்தினார். சி.எஸ்.ஐ. சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ் புது வருட ஆசீர்வாதத்திற்கான பிரார்த்தனையை மேற்கொண்டார்.
மேலும், கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, அசம்பிளி ஆஃப் காட் தேசிய தலைவர் போதகர் ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபை பேராயர்கள், போதகர்கள், ஊடகத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்புகளை “இயேசு அழைக்கிறார்” நிறுவன தலைமை நிர்வாகி முனைவர் எஸ்.ஜே. கிங்ஸ்லி ஒருங்கிணைத்தார்.

