காஞ்சிபுரத்தில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய ஆறு சிறுமிகளின் இருவர் பிடிபட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் சிறு வயதில் திருமண வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் அரசு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுமிகள் காதல் பிரச்சனையால் மீட்டு குழந்தைகள் நல குழுமத்தினால் சேரக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்று விட்டனர்.
அப்போது, இரவு பணியில் இருந்த பாதுகாவலரனின் அறையை வெளிப்பக்கமாக தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தப்பியோடிய ஆறு சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
அதே போல் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியும், கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்களது வீடுகளுக்கு சென்ற நிலையில், அவர்களின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுமிகளை ஒப்படைத்தனர்.
மீதம் உள்ள நான்கு சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணிவிடை நீக்கம் செய்து சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.