கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பொங்கலுக்குள் திறப்பு
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட 88 ஏக்கரில் பெரிய அளவிலான பேருந்து முனையம் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் பண்டிகை காலங்களில் பெருங்களத்தூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்நிலையில், வருகின்ற ஜனவரி 2024 பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமயநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பெய்த கன மழையில் தண்ணீர் தேங்கியதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது வடிகால் அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
வருகின்ற பொங்கல் பண்டிகைக்குள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இப்பேருந்து நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்படும் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 1 லட்சம் பயணிகள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து முனையத்தில் சுமார் 270 கார்கள், 3500 இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.