General

பூச்சிக்கொல்லி குடித்த பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவருக்கு சென்னை கிளீனிகல்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் பாராகுவாட் எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து குளிர்பான பாட்டிலில் கலந்து வைக்கப்பட்டிருந்தது தெரியாமல் அதனை குடித்துள்ளார் அப்பெண்.

சில மணிநேரங்களில் அவர் நடுக்கம், உடல் பலவீனம், வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரணம் அறியாததால் அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டு மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வேறொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தியிருப்பதை உறுதிசெய்தனர். அவருடைய நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தனர்.

வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளீனிகல்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

கிளீனிகல்ஸ் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு திட்ட இயக்குனர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணியம் நோயாளியை பரிசோதித்ததில் நோயாளியின் உடலில் சாதாரணமான அளவை விட நான்கு மடங்கு அதிகமான அளவில் கார்பன்டை ஆக்ஸைடு இருப்பதும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதையும் கண்டறிந்தார்.

இதன் காரணமாக அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நுரையீரல் படிப்படியாக மோசமடையத் துவங்கியது, அவரை காப்பாற்ற ஒரே தீர்வு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் என்று அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது பெயர் உறுப்பு தான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

ஐந்து நாள் காத்திருப்பிற்கு பிறகு மூளை பாதிப்பால் இறந்த பெண் ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட நுரையீரல் இவருக்கு பொருத்தப்பட்டது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து அவருக்கு எக்மோ சிகிச்சை நிறுத்தப்பட்டது. தற்போது அவர் இயல்பாக சுவாசித்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கிளீனிகல்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் பாதுகாப்பு மற்றும் தூக்க மருந்து திட்ட இயக்குனர் டாக்டர் அபர் ஜிண்டால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *