கண் அழுத்த நோய்க்கு 10 நிமிட எளிய அறுவை சிகிச்சை
அகர்வால் கண் மருத்துவமனையில், கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து நிமிடங்களில் செய்யக்கூடிய எளிய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கண் அழுத்தம் என்பது கண்ணின் விழி நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளினால் கண்களில் ஏற்படும் அழுத்தமே ஆகும்.
கண்ணில் ஏற்படும் பாதிப்புகளில் இந்த நோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. பார்வை இழப்பிற்கு மூன்றாவது காரணமாகவும் உள்ளது.
இந்தியாவில் இந்நோயினால் சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண் அழுத்த நோய்க்கு பலவித சிகிச்சை முறைகள் இருந்தாலும், இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட 63 வயதான சென்னையை சேர்ந்த நபருக்கு அகர்வால் கண் மருத்துவமனையில் Minimally-Invasive Glaucoma Surgery என்னும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் இயக்குனரம், தலைமை மருத்துவ அதிகாரியுமான மருத்துவர் அஸ்வின் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசியபோது,
MIGS (Minimally-Invasive Glaucoma Surgery) என்பது கிளாகோமா (Glaucoma) என அழைக்கப்படும் கண் அழுத்த நோய்க்கான ஒரு புதிய எளிய சிகிச்சை முறையாகும்.
இம்முறையில் ஸ்டென்ட் எனப்படும் கருவி நோயாளியின் கண்ணின் உட்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்படுகிறது.
இதற்காக மிக குறைந்த அளவில் நுண் ஊடுருவல் மூலம் துளையிடப்படுகிறது. இதற்காக தையல் போட வேண்டிய அவசியமில்லை.
24 மணி நேரத்திற்கு பிறகு நோயாளி தங்களது வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு கண் அழுத்த நோயாளிகள் வழக்கமாக பயன்படுத்தும் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
கண் அழுத்த நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிவதில்லை. இதனால், நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நோய்க்கு மருந்துகள் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சையே தீர்வாக உள்ளது.
எனவே, 40 வயதை கடக்கும் நபர்கள் தங்களது கண்களை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.