கமிஷன் இல்லாத “நம்ம யாத்ரி” ஆட்டோ புக்கிங் ஆப் அறிமுகம்
நம்ம யாத்ரி எனப்படும் ஆட்டோ புக்கிங் ஆப் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திறந்த மின்-வணிகத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் நிறுவப்பட்ட ONDC தனியார் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அண்ணா முன்னாள் மாணவர்களால் மேம்படுத்தப்பட்டது நம்ம யாத்ரி செயலி.
இந்த செயலில் வாடிக்கையாளர்களிடமிருந்தோ, ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்தோ கமிஷன் வசூலிப்பதில்லை. இதனால், கட்டணம் குறைவாக இருக்கும்.
செயலி அறிமுக விழா நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் ஷண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நம்ம யாத்ரி செயலியை அறிமுகம் செய்து, புதிதாக இணைந்த ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஏற்கனவே பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட ஏழு இடங்களில் நம்ம யாத்ரி செயலி பயன்பாட்டில் உள்ளது.
தற்போது சென்னைக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வள்ளுவர் கோட்டம், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, பிர்லா கோளரங்கம், கலங்கரை விளக்கம், டைடல் பார்க், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களுக்கு தமிழில் தொடர்பு கொள்ள முடியும் என்பது சிறப்பு அம்சம்.
இதுதொடர்பாக ஜஸ்பேயின் தலைமை நிர்வாக அதிகாரியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான விமல் குமார் தெரிவிக்கையில், நம்ம யாத்ரி செயலி சமூகம், அரசாங்கம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாகும், தாங்கள் படித்து வளர்ந்த சென்னை நகரத்திற்கு அதைக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நம்ம யாத்ரி செயலியில் சுமார் 10,000 ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்துள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தவும் எனவும் தெரிவித்தார்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ONDC நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நிதின் நாயர், FIDE-யின் தலைமை செயல் அலுவலர் சுஜித் நாயர், ஜஸ்பே யின் தலைமை செயல் அலுவலர் ஷீத்தல் லால்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.