காஞ்சிபுரம்–செங்கல்பட்டில் PNG, CNG விலை குறைப்பு: திங்க் கியாஸ் அறிவிப்பு
காஞ்சிபுரம்: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த கட்டண மாற்றத்தைத் தொடர்ந்து, திங்க் கியாஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு உபயோக பிஎன்ஜி (PNG) மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி (CNG) விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை மாற்றங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளன என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இப்பகுதி மக்களுக்கு தூய்மையான சமையல் மற்றும் வாகன எரிபொருள் குறைந்த விலையில் கிடைக்கும்.
புதிய விலை விவரங்களின்படி,
- காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு உபயோக பிஎன்ஜி விலை கனசதுர மீட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு ரூ.47 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 குறைக்கப்பட்டு ரூ.89.25 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைக் குறைப்பின் மூலம், பிஎன்ஜி பயன்படுத்தும் குடும்பங்களின் அன்றாட சமையல் செலவு குறையும் என்றும், சிஎன்ஜி பயன்படுத்தும் ஆட்டோ, டாக்ஸி மற்றும் பொதுப் போக்குவரத்து வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவில் நன்மை கிடைக்கும் என்றும் திங்க் கியாஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்க் கியாஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அதிகாரி வினுகுமார் பாலகிருஷ்ணன் கூறுகையில், “PNGRB-யின் ஒருங்கிணைந்த கட்டண மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் சேவையை வழங்க எங்களுக்கு உதவியுள்ளது. இதன் மூலம் குடும்பங்கள் சமையல் செலவை குறைக்கவும், சிஎன்ஜி வாகனப் பயனர்களுக்கு சிறந்த எரிபொருள் சிக்கனம் கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது,”
என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விலைக் குறைப்பு வீட்டு உபயோக பிஎன்ஜி விலையில் சுமார் 5 முதல் 6 சதவீதம் வரை நன்மையை அளிக்கும் என்றும், சிஎன்ஜி பயனர்களுக்கு எரிபொருள் செலவு கணிசமாக குறையும் என்றும் அவர் கூறினார்.
புதிய கட்டண மாற்றங்களின் நன்மைகள், பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜியை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் திங்க் கியாஸ் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

