இலவச தாய்ப்பால் வங்கி சென்னை வேளச்சேரியில் துவக்கம்
சென்னை, 31 ஜூலை 2024: சென்னை வேளச்சேரியில் உள்ள பிரஷாந்த் மருத்துவமனையில் இலவச தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது.
இதனை சவீதா மருத்துவ கல்லூரியின் டீன் மருத்துவர் குமுதா, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர் மருத்துவர் ரெமா சந்திரமோகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பிரசாந்த் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் விஜயகுமார், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு தலைவர் மருத்துவர் பிரகாஷ், குழந்தை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் கீதா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த பால் வங்கியில் தாய்மார்களிடமிருந்து தனமாக பெறப்படும் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு குளிரூட்டிகளில் சேமித்து வைக்கப்படும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், இன்னபிற காரணங்களினால் பால் புகட்ட முடியாத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் இலவசமாக சேமிக்கப்பட்ட தாய்ப்பால் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதற்காக உலகத்தரம் வாய்ந்த பிரத்யேக உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரசாந்த் மருத்துவ குழுமத்தின் தலைவர் மருத்துவர் கீதாஹரிப்ரியா பேசுகையில்,
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த பால் வங்கி எங்களது மருத்துவ சேவையில் குறிப்பிடத்தக்க ஒரு மைல் கல்லாகும். ஒவ்வொரு குறைப்பிரசவ குழந்தையும் வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். இதன் மூலம் தாய்மார்களிடமிருந்து தாய்ப்பால் நன்கொடையாக பெறுவதை எளிமையாக்குவதாகவும், இங்கு சேகரிக்கப்படும் தாய்ப்பாலை நகரத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு நன்கொடையாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் பிரசாந்த் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவை வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.