அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து பழவேற்காடு மார்க்கமாக அண்ணாமலைச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து மூலம் பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளும், மீனவர்களும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் செவ்வாயன்று மாலை 3 மற்றும் 5 மணி வரவேண்டிய பேருந்து 4 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் வராததால் பள்ளி கல்லூரி முடிந்து மாணவ மாணவிகள் உரிய நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் கூறாததால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
அப்போது தொடர்ந்து பேருந்துகள் நாள்தோறும் காலதாமதமாக இயக்கப்படுவதாகவும் இதனால் உரிய நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நான்கு மணிநேர கால தாமதத்திற்கு பின்னர் பேருந்து வந்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்களும் பொது மக்களும் கலைந்து சென்றனர்.