82 வயது மூதாட்டிக்கு முழு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை
சென்னை, 12 ஆகஸ்ட் 2024: சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் சிவம் மருத்துவமனையில் 82 வயதான சித்ரா என்ற மூதாட்டிக்கு முழுமையான இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அம்மருத்துவமனையின் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் கீழே தவறி விழுந்ததில் மூதாட்டி சித்ராவிற்கு இடது பக்க இடுப்பு எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக இடுப்பில் தீராத வலி இருந்துளளது. இதன் காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனையில், அவருக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்பட்டிருந்த செயற்கை பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாகவும், அந்த பாதிப்பினால் உண்டான வேதியியல் மாற்றத்தின் காரணமாக அவரது எலும்புகளில் அரிப்பு ஏற்பட்டு அவருக்கு வலி உண்டாகியிருப்பதை உறுதி செய்தனர்.
அதனால், அவருக்கு தற்போதுள்ள பாகங்களை முழுமையாக அகற்றி, முழு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதே ஒரே வழி என்று நோயாளிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
நோயாளி 82 வயதை கடந்திருப்பதும், ஏற்கனவே அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதோடு, தற்போதைய சூழலில் எலும்பு தேய்மானம் அதிகரித்திருந்ததும், உள்புறம் மென்மையான சவ்வுகள் கிழிந்திருந்ததும் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இருப்பினும், மருத்துவர் சிவகுமார் தலைமையில் சிவம் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் சுமார் நான்கு மணி நேரமாக போராடி மூதாட்டியின் இடுப்பில் பழைய உடைந்த பாகங்களை அகற்றி, புதிய செயற்கை மூட்டினை பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
ஒரு மாத கால ஓய்விற்கு பிறகு உபகரணங்கள் உதவியின்றி மூதாட்டி நடக்க தொடங்குவார் என மருத்துவர் சிவகுமார் தெரிவித்தார்.