ரோபோட் மூலம் சிறுநீரக கட்டி அகற்றம்; முதியவருக்கு டயாலிசிஸின் தேவை இல்லாமல் செய்த சாய் யூரோ க்ளினிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள்
● நோயாளிக்கு ஏற்கனவே இடது சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து இருந்த நிலையில் வலது சிறுநீரகத்தில் கேன்சர் கட்டி உருவானது
● நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாலும், எளிதில் அணுக முடியாத இடத்தில் கட்டி இருந்தாலும் வழக்கமான அறுவை சிகிச்சை முறைகள் பாதுகாப்பானதாக கருதப்படவில்லை
சென்னை, பிப்ரவரி 29, 2024: சென்னையில் உள்ள சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனையான சாய் யூரோ கிளினிக் 71-வயது முதியவருக்கு ரோபோட்டின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து அவரது வலது சிறுநீரகத்தில் இருந்த கேன்சர் கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
ஏற்கனவே நோயாளியின் இடது சிறுநீரகம் முற்றிலும் செயல் இழந்திருந்தது. அவர் நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவருடைய வலது சிறுநீரகத்தில் கேன்சர் கட்டி உருவாகி அதன் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.
உடனடியாக கட்டியை அகற்றாவிட்டால் வலது சிறுநீரகமும் செயலிழந்து முதியவர் டயாலிசிஸை நம்பியே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
ஆனால் அவருடைய வயது, நாள்பட்ட வியாதிகள், மேலும் கட்டி இருந்த சிக்கலான இடம் ஆகிய காரணங்களால் வழக்கமான திறந்த நிலை அறுவை சிகிச்சையை அல்லது லேப்ராஸ்கோபி சிகிச்சையை செய்வது பாதுகாப்பானதல்ல.
இம்முறைகளில் அதிக இரத்த இழப்பு அல்லது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.
இதனால் மருந்து மாத்திரைகள் கொண்டே அவருக்கு வைத்தியம் அளிக்கப்பட்டு வந்தது.
அதிர்ஷ்டவசமாக நோயாளிக்கு ரோபோட் உதவிக்கரம் நீட்டியது. இந்நவீன தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த இரத்த இழப்பில் சிறுநீரகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கேன்சர் கட்டி அகற்றப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை தேர்ந்த சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சாய் யூரோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் வசந்தராஜா ராமசாமி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஆகியோர் செய்தனர்.
சிகிச்சை குறித்து டாக்டர் வசந்தராஜா கூறுகையில், “நோயாளியின் வலது சிறுநீரகத்தில் 3.5 சென்டி மீட்டர் அளவுள்ள கேன்சர் கட்டி உருவாகி இருந்தது. மேலும் அந்தக் கட்டி எளிதில் அணுக முடியாத இடத்தில் இருந்தது. அவரது வயது, உடல்நிலை மற்றும் கட்டி இருந்த இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோபோட் அறுவை சிகிச்சை செய்வதென முடிவு செய்தோம்,” என்றார்.
“மேலும் ரோபோட் அறுவை சிகிச்சை மிகத் துல்லியமானதாகும். சிறுநீரகத்தில் லட்சக்கணக்கான பில்டர்கள் உள்ளன. அவற்றை நெப்ரான் என்று அழைப்பார்கள். இந்த அறுவை சிகிச்சையின் போது சில சிறப்பு வழிமுறைகளை பின்பற்றி நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் நெப்ரான்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். கேன்சர் கட்டி இருந்து இடத்திற்கு செல்லும் இரத்தத்தை மட்டும் தடுத்து விட்டோம். நல்லவிதமாக, அறுவை சிகிச்சையின் போது மிகக் குறைந்த இரத்த இழப்பே ஏற்பட்டது. இக்காரணங்களால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டிய அவசியமோ, டையாலசிஸ் செய்ய வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை. சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.”
சிறுநீரகத்தில் அதிக இரத்த நாளங்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செல்லும் இரத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு மட்டுமே செல்கிறது. இதனால் சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது, கட்டுக்கு மீறிய அதிக இரத்தக் கசிவு ஏற்படாமல் தடுக்க, இரத்தத்தின் வரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது வழக்கம். ஆனால் இந்த குறிப்பிட்ட நோயாளிக்கு ஒரே ஒரு சிறுநீரகம் தான் இயங்கி கொண்டிருந்தது. மொத்தமாக இரத்தம் தடை செய்யப்பட்டால், சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து விடும். இந்த அபாயத்தை தவிர்க்க 3டி மாடல் முறையில், எந்த நாளத்தின் வழியாக சிறுநீரக கட்டிக்கு இரத்தம் வருகிறது என்பது கண்டறியப்பட்டு கட்டிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் மட்டும் தடை செய்யப்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதும் சிறுநீரகத்தின் பிற பகுதிகளுக்கு இரத்தம் சென்று அதன் செயல்பாடு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையில் 50 மில்லி அளவுக்கும் குறைவாகவே இரத்த இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.