General

RTE விண்ணப்பிப்பது எப்படி; முழுமையான விளக்கம்

RTE எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில வழிவகுக்கும் சட்டம் 2009 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

அதன்படி, சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரும், பொருளாதாரரத்தில் நலிவடைந்த பிரிவினரும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து கல்வி பயில வழிவகுக்கும். அதற்கான கல்வி செலவை மத்திய, மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு செலுத்திவிடுகின்றன.

இதற்காக தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில பள்ளி கல்வித்துறையின் மூலம் நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயிலலாம்.

நேரடியாக இல்லாமல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://tnschools.gov.in/ என்கிற இணையதளத்தின் மூலம் தாங்களாகவும் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் 22-04-2024 முதல் 20-05-2024 வரை பெறப்படுகின்றன.

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

அரசின் வழிகாட்டுதலின் படி, சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக கீழ் காணும் பட்டியலில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

1.சாதி ரீதியாக பின்தங்கியவர்கள் அதாவது எஸ்.சி.(SC), எஸ்.டி.(ST), பி.சி.(BC), எம்.பி.சி.(MBC) ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள்
2.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
3.ஆதரவற்ற (அனாதை) குழந்தைகள்
4.எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
5.மூன்றாம் பாலினத்தவர்கள்

6.அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள்

    ஆகியோர் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி கற்க விண்ணப்பிக்கலாம்.

    என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

    பொதுவான ஆவணங்களாக குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் சாதி சான்றிதழ், குழந்தையின் ஆதார் அட்டை, பெற்றோரின் ஆதார் அட்டை ஆகியவை அவசியம்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் விண்ணப்பிக்க தாசில்தாரிடம் பெறப்பட்ட பெற்றோரின் வருமான சான்றிதழ் அவசியம். பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும்.

    ஆதரவற்றோர் பிரிவில் விண்ணப்பிக்க மாவட்ட சமூகநலத்துறை அலுவலரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

    எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்க இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியிடம் பெறப்பட்ட சான்றிதழ் தேவைபடுகிறது.

    மேலும், அரசு துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை கொண்டும், தனியார் நிறுவனங்கள் அல்லது சுயமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட சான்றிதழ் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிப்பவர்களின் விலாசம் தங்களது ஆதார் அட்டையில் சரியாக இருப்பது அவசியம். அதேபோல் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் தனியார் பள்ளிகள் இருப்பது அவசியம்.

    ஒருகிலோமீட்டர் தொலைவிற்குள் அரசு பள்ளிகள் இல்லையென்றால் 3 கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமான 3 தனியார் பள்ளிகளை பெற்றோர் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் சீட் கிடைக்கவில்லையென்றால் அடுத்தடுத்த பள்ளிகளில் கிடைக்க வாய்ப்பிருக்கும்.

    எல்.கே.ஜி வகுப்பிற்கு சேருவதற்கான வயது வரம்பாக 01-08-2020 முதல் 31.07.2021 ஆகிய தேதிகளில் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்கள் குழந்தைகள் விண்ணப்பிக்க முடியும்.

    ஒன்றாம் வகுப்பிற்கு சேருவதற்கான வயது வரம்பாக 01-08-2018 முதல் 31.07.2019 ஆகிய தேதிகளில் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்கள் குழந்தைகள் விண்ணப்பிக்க முடியும்.

    பெரும்பாலான பள்ளிகளில் RTE மூலம் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை நடைபெறுவதில்லை என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்.கே.ஜி வகுப்பிற்கு மட்டுமே பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுவதால் பெற்றோர்கள் தங்களது ஆவணங்களிலும், விண்ணப்பிக்கும் முறையிலும் கவனமாக இருப்பது மிக முக்கியமானது.

    ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் பள்ளி கல்வித்துறையின் மூலம் விண்ணப்பித்தவரின் தொலைபேசி எண்ணிற்கு விண்ணப்பத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    பள்ளி கல்வித்துறையின் மூலம் தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டாலோ, நிராகரிக்கப்பட்டாலோ குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

    விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் மே மாதம் 20-ஆம் தேதிக்கு பிறகு தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் இருந்து கலந்தாய்வில் பங்கேற்க பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற ஒரு அரசு அதிகாரி உடனிருப்பார். பள்ளியில் இருக்கும் 25 சதவீத
    இட ஒதுக்கீட்டையும் விட அதிகளவில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றால், குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும்.

    அரசு வழிகாட்டுதலின்படி, விண்ணப்பித்த அனைத்து குழந்தைகளின் பெயர்களும் துண்டு சீட்டில் எழுதி குடுவையில் இடப்படும். அந்த துண்டு சீட்டுகள் அனைத்தும் குழந்தைகளை கொண்டே எடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும். குலுக்கலின்போதும் குளறுபடிகளை தவிர்க்க அரசு அதிகாரி உடனிருப்பார்.

    அவ்வாறு தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு சில பள்ளிகளில் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் சில பள்ளிகளில் பாதியளவு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *