சத்யபாமா மருத்துவமனையில் பெண்களுக்கு இலவச சிகிச்சைக்கான மருத்துவ அட்டையை அறிமுகம் செய்தார் நடிகை சமந்தா
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் சத்தியபாமா மருத்துவமனையில் பெண்களுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கான இலவச மருத்துவம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக சத்தியபாமா நிறுவனத்தின் சார்பில் “She First” என்னும் திட்டம் துவங்கப்பட்டு, அதன் மூலம் “அன்பு” என்னும் மருத்துவ அட்டை வழங்கப்படுகிறது.
இதன் அறிமுக விழா நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேந்தர் மரியஜீனா ஜான்சன், நடிகை சமந்தா ஆகியோர் “அன்பு” மருத்துவ அட்டையை அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் துணைத் தலைவர் மரிய பெர்னாடெட் தமிழரசி துணைத் தலைவர் கேத்தரின் ஜான்சன், டாக்டர் மேரி ஜான்சன், துணைத் தலைவர் அருள் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் கூறுகையில், ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது குடும்பத்தின் அஸ்திவாரமாகத் தொடர உதவுவதற்கு மிக முக்கியமான அம்சமாகும் என்று வலியுறுத்தினார். இந்த முயற்சி ஒவ்வொரு பெண்ணின் மனதையும் சென்றடைய மேற்கொண்ட முயற்சியாகக் குறிப்பிட்டு, பெண்களிடையே நல்வாழ்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தம் வகையில் துவக்கியுள்ளோம் என்றார். “ஆரோக்கியமான பெண் குடும்பத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்” என்று கூறி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பெண்கள் சுய சுகாதார முன்னேற்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
நடிகை சமந்தா பேசுகையில், தன்னை சத்யபாமா குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், இந்த சேவை முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் “பெண்கள் தங்கள் நலனைப் பற்றி சிந்திப்பது சுயநலம் என்று கருதி முக்கியத்துவம் தருவதில்லை” மற்றும் தற்போது பெண்களின் ஆரோக்கியம் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது அதனால் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை என்றார். சத்யபாமாவின் அன்பு ஹெல்த் கார்டு முயற்சி இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று கூறினார்.
இந்த மருத்துவ அட்டைகள், தற்போது கல்லூரி பயிலும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஹெல்த் கார்டுகள் மூலம் பொது மருத்துவம், புற்றுநோய் கண்டறியும் மேமோகிராம், இரத்த பரிசோதனை பகுப்பாய்வு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, கண் பராமரிப்பு, வாய்வழி சுகாதாரம், வயிற்று ஸ்கேன், ஹெச்பி எண்ணிக்கை ஆகிய மருத்துவ பரிசோதனைகளை இலவசமாகப் மேற்கொள்ள முடியும்.
சென்னையில் இயங்கி வரும் சத்யபாமா பொது மருத்துவமனையில் பின்வரும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கண், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள், மகளிர் நோய் மருத்துவ இயல், மருத்துவ சேவைகள், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், இரையகக் குடலியவியல் (Gastroentrology), நீரிழிவு நோய், பல் மருத்துவம் ஆகியவற்றோடு சேர்த்து இரத்த பரிசோதனைகள், முழுமையான இரத்த எண்ணிக்கை, கல்லீரல் செயல்பாடு சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனை, எலக்ட்ரோலைட்டுகள், HbA1c, டைபாய்டு பரிசோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், எக்ஸ்ரே, ஈசிஜி, உடலின் அனைத்து பகுதிகளிலும் அல்ட்ராசவுண்ட் குறிப்பாக வயிறு பகுதி, மேமோகிராம், தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.
“ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், மரியாதை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் நடத்தப்படும் உங்கள் ஆரோக்கியத்திற்கான பயணம் இங்கே தொடங்குகிறது” என்று சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் கூறினார்.