மெட்ரோ ரயில் நிலையங்களில் AI மருந்தகங்கள் திறப்பு
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் சிம்ஸ் மருத்துவமனையின் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் சிம்ஸ் மருத்துவமனைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முதற்கட்டமாக 40 ரயில் நிலையங்களில் இந்த மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னை வடபழனியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில், சிம்ஸ் மருத்துவமனையின் துணை தலைவர் ராஜு சிவசாமி, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ஜுனன், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி ஆகியோர் கலந்துகொண்டு மருந்தகத்தின் செயல்பாட்டினை துவக்கி வைத்தனர்.
இந்த மருந்தகங்களின் மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் மருந்துகளை சலுகை விலையில் வாங்க முடியும். அதோடு டெலி கன்சல்டிங் முறையில் சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் சிகிச்சை பெறலாம்.
மெட்ரோ பயணிகளுக்காக பிரத்யேகமாக மருந்துகள் வீட்டுக்கு டெலிவரி செய்யும் முறையும் கொண்டுவரப்படவுள்ளது.
மேலும், இந்த மருந்தகங்களில் மூலம் சிம்ஸ் மருத்துவர்களிடம் நேரடி சிகிச்சை பெறுவதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். சிம்ஸ் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தில் 20 சதவீத சலுகையும் வழங்கப்படவுள்ளது.
தற்போது 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளிடம் வரவேற்பை பொறுத்து மேலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த மருந்தகங்களின் மூலம் ஆண்டொன்றுக்கு 80 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.