எஸ்.ஆர்.எம் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தஞ்சை கமலா சுப்பிரமணியம் பள்ளி அணி வெற்றி
சென்னை, 14 ஜூலை 2024: எஸ்.ஆர்.எம் கல்விக்குழும தலைவர் பிறந்தநாள் கோப்பை 2024-ன் மாநில அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 250 பள்ளி மாணவர்கள் 22 குழுக்களாக கலந்துகொண்டனர். ஜூலை 13 மற்றும் 14-ஆம் தேதிகளில், நாக் அவுட் முறையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டது.
முதல் அரையிறுதி போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கமலா சுப்பிரமணியம் மேல்நிலை பள்ளி மாணவர்களும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலை பள்ளி மாணவர்களும் மோதினர். இதில், 62-க்கு 34 என்கிற வித்தியாசத்தில் எம்.எஸ்.பி. பள்ளியை கமலா சுப்பிரமணியம் பள்ளி வென்றது.
அதேபோல், இரண்டாவது அரையிறுதி போட்டியில் கோவை மாவட்டம் சபர்பன் மேல்நிலை பள்ளியும் சேலம் செயின்ட் மேரிஸ் மேல்நிலை பள்ளியும் மோதின. இதில், 71-க்கு 61 என்கிற வித்தியாசத்தில் கோவை சபர்பன் பள்ளி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், தஞ்சை கோவை பள்ளிகள் மோதின. இதில், தஞ்சை மாவட்டம் கமலா சுப்பிரமணியம் மேல்நிலை பள்ளி 78-க்கு 55 என்கிற எண்ணில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் விளையாட்டுத்துறை இயக்குனர் பேராசிரியர் மோகனகிருஷ்ணன், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முருகன் ஆகியோர் எஸ்.ஆர்.எம் கல்விக்குழும தலைவர் பிறந்தநாள் கோப்பை, ஊக்கத்தொகை, சான்றிதழ்களை வழங்கின பாராட்டினர்.
மேலும், சேலம் மாவட்ட செயின்ட் மேரிஸ் பள்ளியை சேர்ந்த திருமலை வாசன், தஞ்சை மாவட்ட கமலா சுப்பிரமணியம் பள்ளி வீரர் அபய் பிரபு, கோவை சபர்பன் பள்ளியை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.