Health

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி 20,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் தினம் கொண்டாடப்பட்டது.

எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தரின் தாயார் வள்ளியம்மையின் நினைவாக கடந்த 2014 ஆம் ஆண்டு வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவிக்கும் மகளிருக்கும், அவரின் குழந்தைக்கும் பராமரிப்பு செலவாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பெண்கள் பிரசவகால பராமரிப்புக்களை தவறாமல் மேற்கொள்வதன் மூலம் தாய் சேய் நலம் பாதுகாக்கப்படுவதுடன், தாய்-சேய் இறப்பு விகிதம் குறையும் என்று அம்மருத்துவமனை உறுதியாக நம்பியது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிகள் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் பார்க்க தொடங்கினர்.

இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு கொண்டுசேர்க்கும் விதமாக விதமாக ஆண்டுதோறும் தாய் சேய் தினம் என்ற நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டாடி வருகிறது.

இந்தாண்டிற்கான தாய் சேய் தினம் அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மணிமேகலை சத்தியநாராயணன் கலந்துகொண்டு சுமார் 200 தாய்மார்களுக்கு நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

இதுவரை பத்தாயிரம் ரூபாயாக வழங்கப்பட்ட வந்த திருமதி. வள்ளியம்மை தாய் சேய் நலதிட்டத்தின் நிதியுதவி கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலை சத்தியநாராயணன், எங்களது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமதி. வள்ளியம்மை தாய் சேய் நலதிட்டத்தின் மூலம் நீங்கள் பயனடைந்தது போல், தங்களது பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இத்திட்டத்தை பற்றி எடுத்துரைத்து அவர்களும் பயன்பெற நீங்கள் உதவிட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இதுவரை கர்ப்பிணியாக நீங்கள் இங்கு சிகிச்சை பெற்றது போல், பிரசவத்திற்கு பிறகும் ஒரு தாயாக உங்களுக்கும், உங்களது குழந்தைக்கும் தேவையான அணைத்து மருத்துவ உதவிகளும், சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *