ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆரோக்கிய சேவா கேந்திரா மருத்துவ மையம்; சென்னையில் துவக்கம்
சென்னை: இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான Star Health and Allied Insurance, தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ், மக்கள் வசிக்கும் இடத்திலேயே தரமான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் 9 மாநிலங்களில் 32 ‘ஆரோக்கிய சேவா கேந்திரா’ மையங்களை இன்று அறிமுகப்படுத்தியது.
இதன் முதற்கட்டமாக, சென்னை எழும்பூரில் முதல் மையம் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல் நாகர்கோவில், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த சேவைகள் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் 20 முதல் 40 சதவீதம் வரை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை குறிவைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இம்மையங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களின் ஆலோசனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறிதல், இலவச மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. மேலும், பெரியவர்களுக்கான நிமோகோக்கல் தடுப்பூசியும் முழுமையாக இலவசமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டம் Pramila Swasthya Foundation உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள ஸ்டார் ஹெல்த், அடுத்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
எளிய மக்களும் தங்களது வீட்டிற்கு அருகிலேயே தரமான ஆரம்ப சுகாதாரச் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆனந்த் ராய் தெரிவித்துள்ளார்.

