அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
சென்னை: அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணியில் சேர்ந்த 12ஆம் ஆண்டில் Pay Band 4 வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி கூடுதல் மருத்துவர்களை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் அரசு மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் அதிருப்தி மற்றும் விரக்தி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 28, 2026 முதல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர்களை அரசு அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் குறைவான ஊதியம் பெறுவதாகவும், சமூக நீதியை முன்னிறுத்தும் அரசு பொருளாதார நீதியையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு காவல்துறை இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும், அமைதியான போராட்டத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
