தமிழ் செய்திகள்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பிரச்சனைகள் குறித்து சிவ்தாஸ் மீனா-வை நேரில் சந்தித்த ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக TNRERA-வின் தலைவர் திரு.சிவ்தாஸ் மீனா அவர்களை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள், சட்டசிக்கல்கள், வீட்டுமனை பிரிவு, அடுக்குமாடி குடியிருப்பு. வணிகவளாகங்கள் மற்றும் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவு திட்டங்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட கால தாமதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மேலும் உச்சபட்சமாக தண்ட தொகையினை விதிப்பது அதாவது நகர் மற்றும் கிராமப்புறங்களில் முறையே மனை ஒன்றிற்கு ரூபாய்3000/- முதல் ரூபாய்15,000/- வரை என்கிற வகையிலும், அதுமட்டுமல்லாது திட்டத்தின் மொத்த மதிப்பில் 1% சதவீதம் என்கிற அடிப்படையிலும் உச்சபட்சமாக விதிக்கப்படும் தண்டதொகை சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டன. .

TNRERA-வின் தலைவர் சிவ்தாஸ் மீனா அவர்களுடனான நடைபெற்ற இச்சந்திப்பின் போது ஃபெயிரா கூட்டமைப்பின் சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பொதுமக்கள் தங்களின் திட்டங்களை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை விண்ணப்பித்து, இதுவரை பதிவு செய்து உத்தரவு வழங்காமல் புதிய வீட்டுமனை பிரிவு – 2346 திட்டங்களும், மனை வரன்முறை – 210 திட்டங்களும், குடியிருப்பு கட்டடம் – 120 திட்டங்களும் மற்றும் வணிக கட்டடம் – 04 திட்டங்களும் ஆக மொத்தம் 2680 திட்டங்களுக்கு தீர்வு ஏற்படாமல் நிலுவையில் உள்ளவைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் வழிவகை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

அபிவிருத்தியாளர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் தங்களின் புதிய திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பித்தால், புதிய வீட்டுமனை பிரிவிற்கு ஒரு வாரத்திற்கு உள்ளாகவும், குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களுக்கு இரண்டு வாரத்திற்கு உள்ளாகவும் பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மேலும் TNRERA சட்டம் பிரிவு 5(2)ன் கீழ் ஆணையமானது 30 நாட்களுக்குள் பதிவு செய்து உத்திரவிட வேண்டும் என்பதனை 15 நாட்களாக குறைத்து பதிவு செய்திடும் வகையில் வழிவகை செய்திட வேண்டும். மேலும் TNRERA-வில் பதிவு செய்து 15 நாட்களுக்கு மேலாக உத்தரவு வழங்கிட காலதாமதம் ஆகும் இனங்களில் Automatic and Deemed approval இன் படி அந்த குறிப்பிட்ட விண்ணப்பமானது அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள அபிவிருத்தியாளர்களின் வீட்டுமனை, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட திட்டங்களுக்கு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து உத்தரவு பெறுவதற்கு விண்ணப்பித்தால் புதிய வீட்டுமனை பிரிவிற்கு ட்ரோன் கேமரா வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்துவதும் மற்றும் குறைந்த மின்னழுத்தம் /அதிக மின்னழுத்த மின்கம்பிகள் மற்றும் தொலைதொடர்பு வடங்கள் மனை பிரிவின் வழியே செல்லும் பட்சத்தில் அவைகளை சாலையின் விளிம்பிற்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளபடி மாற்றம் செய்து அது குறித்த தகவலை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் தான் பதிவு செய்து உத்தரவு வழங்கப்படும் என்கிற TNRERA-வின் புதிய விதியின் காரணமாக புதிய வீட்டுமனை விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

காரணம் சம்பந்தப்பட்ட துறையினரிடம் மின்கம்பிகளையும், தொலைதொடர்பு வடங்களையும் இட மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்து, அத்துறையினர் நேரில் கள ஆய்வு செய்து, அதற்கான செலவு தொகையினை மதிப்பீடு செய்து, அதற்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு செயல் முறைப்படுத்தி இடம் மாற்றம் செய்வதற்கு குறைந்தது ஒரு வருடகால அவகாசம் எடுத்து கொள்கின்றார்கள்.

ஆகவே மேற்கண்ட புதிய வீட்டுமனைபிரிவின் வழியே செல்லும் மின்கம்பிகளையும் தளவாடங்களையும் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு, விண்ணப்பதாரர்கள் செலுத்தி அதற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் காலம் தாழ்த்தாமல், பொதுமக்களின் மனைபிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்து உத்தரவு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

உதாரணத்திற்கு 100 வீட்டு மனைகள் கொண்ட மனை பிரிவில் மின் கம்பிகள் மற்றும் தளவாடங்களுக்கு கீழ் அமையும் ஒரு சில குறிப்பிட்ட மனைகளை தவிர்த்து மீதமுள்ள வீட்டு மனை பிரிவுகளுக்கு பதிவு செய்வதற்கான உத்தரவு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் பணியானது தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் ஆவணங்களை சரிபார்த்து குறித்த காலத்திற்குள் பதிவு செய்து கொடுப்பதாகும். அதே சமயம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்குட்பட்ட (CMDA) பகுதிகளில் Government Pleader GP and AG Legal opinion அடிப்படையில் அரசு வழங்கிய சட்டகருத்துறையின் அடிப்படையிலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனுமதியை CMDA-வும் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) பகுதிகளில் DTCP-யும் வழங்குகின்றன. இறுதி ஒப்புதலை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு கள நிலவரங்களை ஆய்வு செய்து, அதில் எதுவும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளதா என்பதை அறிந்து நிபந்தனைகளின்படி அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டு இருக்கின்றதா என ஆய்வு செய்து இறுதி ஒப்புதல் அளிக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் இத்திட்டத்தை பதிவு செய்து உத்தரவு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

வீடு, வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் திட்டங்களை TNRERA-வின் சட்டதிட்டங்களை பின்பற்றி முறையாக பதிவு செய்து ஒப்புகை சீட்டை பெற்றும், குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி கிடைக்கப்பெறாமல் பல காரணங்களை காட்டி முடிவெடுக்கப்படாமல் கிடப்பில் போடுவதின் காரணமாகவும், TNRERA-வின் ஒப்புகை சீட்டின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யும் காரணங்களுக்காக பதிவு செய்யும் இனங்கள் மற்றும் எதிர்பாராத அவசர தேவைக்காக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் அபிவிருத்தியாளர்களுக்கு அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றோம். மேலும் சமீபத்தில் TNRERA-வின் சட்டதிட்டங்களை பின்பற்றி முறையாக பதிவு செய்து ஒப்புகை சீட்டினை பெற்ற பின்பும் மேற்கூறிப்பிட்ட காரணங்களால் சிலருக்கு விதிக்கப்பட்ட தண்டதொகையினையும் ரத்து செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

அதேசமயம் TNRERA-வின் சட்டதிட்டங்களை பின்பற்றாமலும் மற்றும் முறையாக பதிவு செய்யாமல் விதிமுறைகளை மீறி மனைகளை விற்பவர்களுக்கு மேற்கூறிப்பிட்ட வகையில் அபராதம் விதிப்பது மட்டுமல்லாது அபராத தொகையை இரண்டு மடங்காக உயர்த்தினாலும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

நகர்ப்புறங்களில் அரசாணை (GO181/2020)இன் படி வீடு, வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து உரிய கட்டணத்தை பெற்று கொண்டு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி கொடுப்பது என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். எனவே TNRERA வீடு, வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து அடிப்படைக் கட்டமைப்பு, ட்ரோன் கேமரா மூலம் பதியப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பிற்கான புகைப்படங்களை கோருதல் என்பது ஏற்புடையதல்ல.

எனவே அபிவிருத்தியாளர்கள் தங்களின் மனை பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்கான உரிய கட்டணத்தை நகர்ப்புற உள்ளாட்சிக்கு செலுத்திய ஒப்புகை சீட்டின்அடிப்படையில் TNRERA-வில் பதிவு செய்து உத்தரவு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் TNRERA-வில் திட்டங்களை விண்ணப்பித்த நில உரிமையாளர்கள் (முதல்வர்கள்), வீடு, வீட்டுமனை உரிமையாளர்கள் குறித்த முழு தகவல்களையும் வழங்கிடுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம் வீடு, வீட்டுமனை உரிமையாளர்களால் (Power of Attorney) கொடுக்கப்பட்டவர்களின் முழு தகவல்களையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என கோருவது ஏற்புடையதல்ல

வீடு, வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு TNRERA-வின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே மேற்கூறியவைகளை குறித்து TNRERA-வின் இணையதளத்தின் வாயிலாக மாநில மொழியான தமிழ் மொழியில் காணொளிகளை பதிவு செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

அதுபோல் TNRERA-வின் சட்டதிட்டங்கள், நடைமுறைகள், புதிய கொள்கைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் ஆகியவைகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாநில மொழியான தமிழ் மொழியில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

TNRERA-வின் செயல்பாடுகள், தகவல்கள், சேவைகள் மற்றும் உதவிகள் என ஒருங்கிணைந்த சேவை மையங்களை (Help Line) தொடங்கி அதன் வாயிலாக TNRERA குறித்த அனைத்து தகவல்களும் மாநில மொழியான தமிழ் மொழியில் பொது மக்களுக்கு எளிதில் தெரிவிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டுமென உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் மற்றும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட TNRERA-வின் தலைவர் திரு.சிவ்தாஸ் மீனா அவர்கள் ஃபெயிரா கூட்டமைப்பின் மேற்கூறிய கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் மற்றும் TNRERA Act 32இன் கீழ் சிலவற்றிற்கு அரசுக்கு பரிந்துரை செய்து தீர்வு காண வழிவகை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து விரிவாக TNRERA உறுப்பினர்களுடனும் மற்றும் தமிழக அரசுடனும் கலந்து பேசி மேற்கூறிய FAIRA கூட்டமைப்பின் கோரிக்கைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்

https://youtu.be/TjoELDIkDUQ?si=PnOowv1vOp8OUgvB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *