ஆர்.கே. நகரில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்கக் கூட்டம்; 500 பேருக்கு நலத்திட்ட உதவி
சென்னை: தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டமும், 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய், மணலி சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சித் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் என். மரிய வில்சன் தலைமையில் 41-வது வட்டக் கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து இதில் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கொள்கை விளக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உரையாற்றினார். தனது உரையில், கட்சியின் அடிப்படை கொள்கைகள் மற்றும் தமிழக மக்களுக்கான வளர்ச்சி நோக்கங்களை அவர் விளக்கினார்.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஜி. வேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள், இளைஞர், மகளிர், வழக்கறிஞர், ஊடக, தகவல் தொழில்நுட்பம், மாணவர், தொழிலாளர், மீனவர் மற்றும் வர்த்தக அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 38 முதல் 47 வரையிலான வட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆர்.கே. நகர் தொகுதியைச் சேர்ந்த 500 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கட்சியின் அடிப்படை சித்தாந்தங்களாக சமத்துவம், சமூக நீதி மற்றும் முற்போக்கு ஆட்சி ஆகியவை வலியுறுத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘விசில்’ சின்னத்துடன் போட்டியிட்டு கட்சித் தலைவர் விஜய்யை தமிழக முதல்வராக்கும் நோக்கில் கட்சி செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

