வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வேட்புமனு தாக்கல்
சென்னை, ஏப்ரல் 4: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் மோகன், இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மேற்கு பகுதிச் செயலாளர் கூ.பி. ஜெயின், கிழக்குப் பகுதிச் செயலாளர் வே. வாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, கார்த்திக் மோகன் மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திறந்த வாகனத்தில் வில்லிவாக்கம் தொகுதியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். வழியெங்கும் திரண்டிருந்த திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள் மலர் தூவி, முழக்கங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பி.கே. சேகர்பாபு, “கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் திமுக 75 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும்,” என்றார்.
மனுத் தாக்கல் செய்த பின்னர் பேசிய கார்த்திக் மோகன், “வில்லிவாக்கம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே என் இலக்கு. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

