பெண் காவலர் ஓய்வு இல்லம் சென்னையில் திறப்பு
சென்னை சிந்தாதிரிபேட்டையில் பெண் காவலர்கள் தங்கும் வகையில் பெண் காவலர் ஓய்வு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறையில் பெண் காவலர்களின் பொன்விழா ஆண்டை வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சென்னையில் பெண் காவலர் ஓய்வு இல்லம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்காக கடந்தாண்டு ஜூலை மாதம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், பெண் காவலர் ஓய்வு இல்லத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று திறந்து வைத்தார்.
பணி நிமித்தமாகவே, மருத்துவம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவோ மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் மகளிர் போலீசார் பெண் காவலர் ஓய்வு இல்லத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல், சென்னைக்கு பணி மாறுதல் பெற்று வரும் பெண் போலீசாரும் தங்களுக்கு காவலர் குடியிருப்பில் வீடு கிடைக்கும் வரையிலும் அல்லது சொந்தமாகவோ, வாடகைக்கு வீடு கிடைக்கும் வரையிலும் இந்த இல்லத்தில் தங்கி கொள்ளலாம்.
இந்த இல்லத்தில், 2 பேர் தங்கும் வகையிலான 21 அறைகளும், 15 பேர் தங்கும் வகையிலான ஒரு அறையும் உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.