காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்திற்கான உடைகள் அறிமுகம்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையின் பிரபல காவேரி மருத்துவமனையின் சார்பில் கடந்த ஆண்டு K10K என்னும் பெயரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக வருகின்ற 28 ஆம் தேதியன்று இந்த மாரத்தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இதில் பங்கேற்பவர்கள் அணியவுள்ள உடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
காவேரி மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின் இயக்குனர், மருத்துவர் வைத்தீஸ்வரன், அம்மருத்துவமனையின் இயக்குனர் ஐயப்பன் பொன்னுசாமி, அறுவை சிகிச்சை நிபுணர் சுஜய் சுசிகர் ஆகியோர் உடையை அறிமுகப்படுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் வைத்தீஸ்வரன்,
உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பட்சத்தில் நோயாளிகள் விரைவாக குணமாக முடியும், மருத்துவ செலவுகள் குறையும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும், தரமான சிகிச்சை அளிக்க முடியும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பொதுவாக பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பையிலும், ஆண்களுக்கு வாய் மற்றும் வயிற்றிலும் அதிகளவில் புற்றுநோய் உண்டாகிறது.
சில குறிப்பிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோயை கண்டறிய முடியும்.
புற்றுநோய் என்பது குணப்படுத்த கூடிய நோய் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் இதில் பங்குகொள்வதாக அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு சுமார் நான்காயிரம் நபர்கள் கலந்துகொண்ட நிலையில் இந்தாண்டு இதுவரை ஐந்தாயிரம் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.