புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு சென்னையில் அதிநவீன Urolift சிகிச்சை
புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி மற்றும் யூராலஜி (Asian Institute of Nephrology and Urology) மருத்துவமனையில் யூரோலிப்ட் (Urolift) எனப்படும் அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புரோஸ்டேட் சுரப்பி என்பது ஆண்களுக்கு சிறுநீர் பையின் கழுத்துப்பகுதியில் இருக்கும் ஒரு சுரப்பி ஆகும். இதன் வழியாகவே சிறுநீர் குழாயின் மூலம் சிறுநீர் வெளியேறுகிறது.
பொதுவாக நாற்பது வயதை கடக்கும் பெரும்பாலானோருக்கு இந்த சுரப்பியில் வீக்கம் ஏற்படுவது இயல்பு.
இதனால், வலியுடன் சிறுநீர் வெளியேறுவது, குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுவது, அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
புரோஸ்டேட் சுரப்பியில் இருக்கும் அதிகபட்சமான திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் கடநத காலங்களில் அகற்றி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வந்தது.
இருப்பினும் அறுவை சிகிச்சையில் அதிகமான ரத்த போக்கு ஏற்படுவதுடன், நோயாளிகள் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்.
மருத்துவ துறையில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எலெக்ட்ரிக் மற்றும் லேசர் சிகிச்சைகளின் மூலம் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், இதயம் மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கலாக உள்ளது.
இந்நிலையில், போலீசாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சென்னையை சேர்ந்த 73 வயது நபர் ஒருவர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு சிகிச்சை பெறுவதறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி மற்றும் யூராலஜி (Asian Institute of Nephrology and Urology) மருத்துவமனையை அணுகியுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஏற்கனவே இதயத்தை செயற்கையாக இயங்க வைக்கும் பேஸ்மேக்கர் கருவி பொறுத்தப்பட்டிருப்பதையும் மேலும் ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்தனர்.
எனவே இவருக்கு எலெக்ட்ரிக் மற்றும் லேசர் சிகிச்சைகளின் மூலம் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், Urolift எனப்படும் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.
மேட் ஆஷ்லி என்னும் அமெரிக்க மருத்துவரின் மேற்பார்வையில், AINU மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண்குமார் குழுவினர் சிகிச்சையை மேற்கொண்டனர்.
Urolift சிகிச்சை என்பது புரோஸ்டேட் சுரப்பியின் நடுப்பகுதியில் இருந்து பக்கவாட்டிற்கு இழைகள் மூலம் இருக்க கட்டுவது போன்றதாகும்.
இதன் மூலம் புரோஸ்டேட் சுரப்பியின் நடுப்பகுதில் இறுக்கம் விலகி வழி ஏற்படுவதால் நோயாளியால் சிரமமின்றி சிறுநீர் கழிக்க முடியும்.
வயிற்றில் சிறிய அளவிலான துளைகள் இடுவதால் ரத்த போக்கும் ஏற்படுவதில்லை.
புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஏற்பட்டு இதயம், நுரையீரல் உள்ளிட்ட இணை நோய் உள்ள நோயாளிகளுக்கு Urolift சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகும்.
அவ்வாறு தற்போது தங்களது மருத்துவமனையில் வெற்றிகரமாக Urolift சிகிச்சை முறை மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக அயராது பாடுபட்ட நுரையீரல், மயக்கவியல், இதய மருத்துவர்களை பாராட்டுவதாக அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண்குமார் தெரிவித்தார்.