சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா 2026: இசைக்கச்சேரிகளால் களைகட்டிய கலாச்சார விழா
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா, 2026-ம் ஆண்டு தனது 22-வது பதிப்பாக, சென்னையின் பாரம்பரிய மையமான மயிலாப்பூரில் இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த திருவிழா, கோவிலின் நவராத்திரி மண்டபத்தில் நடைபெற்ற காலை நேர இசைக் கச்சேரியுடன் தொடங்கியது. தொடர்ந்து, கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள திறந்தவெளிகள், வீதிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னையில் உள்ள பல்வேறு இசைப்பள்ளிகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்று, தங்களது இசைத் திறமைகளை வெளிப்படுத்தினர். இளம் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் மேடையாகவும் இந்த திருவிழா திகழ்ந்தது.
2026-ம் ஆண்டு திருவிழாவின் முக்கிய அம்சங்களாக,
நாள் 1-ல் திருமதி மீனாட்சி சீனிவாசன் அவர்களின் மாணவர்கள் பங்கேற்ற இசைக்கச்சேரி,
நாள் 2-ல் சேலம் டாக்டர் காயத்ரி வெங்கடேசன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய கச்சேரி,
நாள் 3-ல் திருவையாறு பி. சேகர் அவர்களின் கீழ் பயிற்சி பெற்ற ‘மஹதி அகாடமி’ மாணவர்களின் வாய்ப்பாட்டுக் கச்சேரி மற்றும் பிரபல மாண்டலின் கலைஞர் ஸ்ரீ U. ராஜேஷ் அவர்களின் மாணவர் மாஸ்டர் சமர்த் ஸ்ரீகுமார் வழங்கிய மாண்டலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் இறுதி நாளில், ஸ்ருதிலயா இசைப்பள்ளியைச் சேர்ந்த ஆர். சுரேஷ் அவர்களின் மாணவர்கள் இணைந்து வழங்கிய பல்வேறு வாத்தியங்களின் ஒருங்கிணைந்த இசைக் கச்சேரி பார்வையாளர்களை கவர்ந்தது.
பாரம்பரிய தெருவிழா சூழலில் நடைபெறும் செவ்வியல் கலை நிகழ்வுகள், மயிலாப்பூரை சென்னையின் முக்கிய கலாச்சார மையமாக மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சமூக ஒருங்கிணைப்பையும் பாரம்பரியத்தை கொண்டாடும் உணர்வையும் வலுப்படுத்தியது.

